ADDED : அக் 13, 2024 04:17 AM

சாத்துார்: சாத்துார் நகரில் மெயின் ரோட்டில் இருபுறமும் மக்கள் நடப்பதற்காக பேவர் பிளாக் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சாத்துார் மெயின் ரோட்டில் கே.சி.ஏ.டி.பல்க் முதல் பழைய படந்தால் ரோடு வரை ரோட்டின் இருபுறமும் மக்கள் நடந்து செல்வதற்காக ேபவர் பிளாக பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியுடன் இருபுறமும் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக ரோட்டில் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு எம்சாண்ட் அடித்துள்ளனர். இந்த பணி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சாலையில் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் ,எம்சாண்ட் மணலால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரோட்டின் இருபுறமும் தொடர்ச்சியாக பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெறாமல் ஆங்காங்கே பள்ளம் தோண்டி கல் பதிக்கும் பணி பார்ட் பார்டாக நடைபெறுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரை பஸ் ஸ்டாப் பகுதியில் இதன் காரணமாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் குறுகிய சாலையில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பின்னால் ஒரு வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது.
வாகன நெரிசலை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசாரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பேவர் பிளாக் பதிக்கும் பணியை துரிதப்படுத்திட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.