/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரியகுளம் கண்மாயில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜூலை 28, 2025 03:39 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்பு வரை 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இது அனைவருக்கும் போதாத நிலையில் தண்ணீரை மக்கள் விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திருத்தங்கல் பகுதி மக்களுக்காக பெரியகுளம் கண்மாயில் 30க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதன்படி ஒன்று முதல் 17 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கான தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு கூட தண்ணீர் இல்லை. இதற்காக 2019 ல் பெரியகுளம் கண்மாயில் ரூ. 20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை.
மேலும் தண்ணீர் வினியோகத்திற்காக இங்கிருந்து அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களை ஆங்காங்கே மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். தவிர சுத்திகரிப்பு நிலையம் முழுவதுமே சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதற்கு அடையாளமே தெரியவில்லை. இதனால் இன்று வரையிலும் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.
இதனால் இப்பகுதியினர் புழக்கத்திற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். உடனடியாக பெரியகுளம் கண்மாயில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.