/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரடு முரடு ரோடு, வாறுகால் இல்லாத தெருக்கள் தவிப்பில் சேதுராஜபுரம் ஊராட்சி மக்கள்
/
கரடு முரடு ரோடு, வாறுகால் இல்லாத தெருக்கள் தவிப்பில் சேதுராஜபுரம் ஊராட்சி மக்கள்
கரடு முரடு ரோடு, வாறுகால் இல்லாத தெருக்கள் தவிப்பில் சேதுராஜபுரம் ஊராட்சி மக்கள்
கரடு முரடு ரோடு, வாறுகால் இல்லாத தெருக்கள் தவிப்பில் சேதுராஜபுரம் ஊராட்சி மக்கள்
ADDED : ஜூன் 03, 2025 12:28 AM

அருப்புக்கோட்டை: காசிலிங்காபுரத்தில் கரடு முரடு ரோடு, வாறுகாலின்றி தெருக்கள், தேங்கும் கழிவுநீர் என பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் சேதுராஜபுரம் ஊராட்சி மக்கள்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சேதுராஜபுரம் ஊராட்சியில் காசிலிங்காபுரம், ராம்கோ நகர், சேதுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இவற்றில் 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சேதுராஜபுரத்தில் நிழற்குடை வேண்டும். மக்கள் திறந்த வெளியில் நின்று தான் பஸ் ஏறுகின்றனர்.
பந்தல்குடி ரோட்டில் இருந்து காசிலிங்காபுரம், ஆண்டிபட்டி வரை நான்கரை கி.மீ., துாரம் உள்ள ரோடு பல பகுதிகளில் கற்கள் பெயர்ந்தும், டூவீலர்களில் செல்ல முடியாத நிலையில் கரடு முரடாக உள்ளது. கற்கள் காலில் குத்துவதால் ரோட்டில் நடக்க முடியவில்லை.
இந்த ரோடு அமைத்து 6 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் புதியதாக ரோடு அமைக்க ஊராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ரோட்டை புதியதாகவும் அகலப்படுத்தி அமைக்க வேண்டும்.
காசிலிங்காபுரம் மெயின் ரோட்டில் வாறுகால் வசதி இன்றி கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. பல தெருக்களில் வாறுகால்கள் இல்லாமல் உள்ளது. வடக்கு காலனியில் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இங்கு பொது கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.
தெருக்களில் ரோடுகள், வாறுகால்கள் கட்ட வேண்டும். காலனிக்கு வரும் 20 அடி ரோடு சுருங்கி ஒற்றையடி பாதையாக மாறிவிட்டது. மேடும் பள்ளமுமாக உள்ளது. மயானத்திற்கும் இந்த பாதையை பயன்படுத்தி தான் செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் மயானத்திற்கு செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாமல் உள்ளது. புதியதாக ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பராமரிப்பு இன்றி சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. கண்மாயை துார்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.
வாறுகால் இல்லை
ஈஸ்வரி, குடும்பதலைவி: காசி லிங்காபுரம் மெயின் ரோட்டில் வாறுகால் இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. பல தெருக்களில் வாறுகால் இன்றி கழிவு நீர் தெருவில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
ரோடு இல்லை
ஆயிரன், தொழிலாளி: பந்தல்குடியில் இருந்து காசிலிங்காபுரம் வரையுள்ள ரோடு பல ஆண்டுகளாக போடவில்லை. இதனால் கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. டூவீலர்களில் செல்ல முடியவில்லை. பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
அடிப்படை வசதிகள் தேவை
சின்னவேலு, தொழிலாளி: சேதுராஜபுரம் ஊராட்சி காசிலிங்காபுரத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ரோடு, வாறுகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும். மயான ரோடு, தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.