நுாதன முறையில் கஞ்சா பதுக்கல்
ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி வடக்கு போலீசார் கண்காணித்து ஆய்வு செய்தபோது அப்பகுதியை சேர்ந்த தங்கவேல் 62, அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி 60, ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இருவரது வீட்டிலும் ஆய்வு செய்ததில் அடுப்பின் அடியில் சுரங்கம் அமைத்து அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 1.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.
போக்குவரத்திற்கு இடையூறு பெண் மீது தாக்குதல்
ராஜபாளையம்: ராஜபாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் மகாலட்சுமி 30, கலங்காப்பேரியில் உறவினர் வீட்டிற்கு டூவீலரில் குழந்தையுடன் சென்றபோது வழியில் டிராக்டர் தடையாக நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து வழிவிட ஹாரன் அடித்ததில் கோபமாகி அருகாமை வீட்டிலிருந்த சுப்புலட்சுமி, ராம்குமார் இருவரும் தாக்கியதில் மகாலட்சுமி காயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி, டிராக்டர் பறிமுதல்
விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் - கோட்டூர் சந்திப்பில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியில்லாமல் டிரைவர்களான கடம்பன் குளத்தைச் சேர்ந்த சந்தனகுமார் 37, லாரியில் 9 யூனிட் எம். சாண்ட், மலைப்பட்டியைச் சேர்ந்த கோபி சின்னசாமி 47, டிராக்டரில் 1.5 யூனிட் எம். சாண்ட் கொண்டுச் சென்றனர். போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து சந்தனகுமார், கோபி சின்னசாமி, வாகன உரிமையாளர் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த ஹரிபாலாஜி மீது வழக்கு பதிந்தனர். இரு டிரைவர்களையும் கைது செய்தனர்.
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சுழி: திருச்சுழி அருகே தமிழ்பாடி விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் செம்பொன் நெருஞ்சியை சேர்ந்த வீரசூரன், 24, அருண்குமார், 24, என்பதும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் அவர்களுடைய டூவீலரை பறிமுதல் செய்தனர்.