/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்நிலைகளில் தலைவலியாகும் பாலிதீன் கழிவுகள்! அதிகரிப்பதை கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள்
/
நீர்நிலைகளில் தலைவலியாகும் பாலிதீன் கழிவுகள்! அதிகரிப்பதை கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள்
நீர்நிலைகளில் தலைவலியாகும் பாலிதீன் கழிவுகள்! அதிகரிப்பதை கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள்
நீர்நிலைகளில் தலைவலியாகும் பாலிதீன் கழிவுகள்! அதிகரிப்பதை கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள்
ADDED : மே 21, 2024 07:15 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பாலிதீன் கழிவுகள் அதிகரித்து வருவதும், அதை அதிகாரிகள் கட்டுப்படுத்த தவறு வதும் பெரும் தலைவலியாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெய்த நீரும் வீணாகும் சூழல் தான் உள்ளது.
மாவட்டத்தில் அர்ஜூனா நதி, கவுசிகா நதி, வைப்பாறு ஆகியவை வத்திராயிருப்பு, சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஓடுகிறது. இவை ஆனைக்குட்டம், குல்லுார்சந்தை, கோல்வார்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய அணைகளில் சேகரமாகி வெளியேறுகின்றன. தொடர் சங்கிலி போல் இந்த அமைப்பு உள்ளது. இது தவிர காரியாபட்டியில் பருவ மழைக்காலங்களில் குண்டாறும், கிருதுமால் நதியும் ஓடுகிறது.
அர்ஜூனா நதி, கவுசிகா நதி, வைப்பாறு நீர்நிலைகளில் பாலிதீன் கழிவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகி வருகிறது. இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வராமலே உள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நேரடியாக வீடுகளில் குப்பை வாங்கப்பட்டும், நீர்நிலைகளில் பாலித்தீன் கழிவுகள் தேங்குகின்றன.
ஆனால் ஊராட்சிகளிலோ சுத்தமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் கரையோரங்களை குப்பை மேடாகவும், நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டுமிடமாக பலர் ஊரகப்பகுதிளில் பயன்படுத்துகின்றனர்.
இதனால் நீர்நிலைகள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாக மாறி வருகின்றன. நீர்வள ஆதாரத்துறையினர் கவுசிகா நதி, வைப்பாறு, அர்ஜூனா நதி ஆகியவற்றின் நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
எந்தளவுக்கு அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இந்த மூன்று ஆறுகளிலுமே கருமை நிறத்தில் கலங்கலாக சாக்கடை நீர் தான் ஓடுகின்றன. இது ஆற்றின் வழித்தடத்தின் மண்வளத்தை நேரடியாக பாதிக்கிறது.
அதே நேரம் பிளாஸ்டிக் குப்பையும் அதிகளவில் இருப்பதால் அவை மண்ணுக்குள் புகுந்து நிலத்தடி நீர் அதிகரிப்பதை தடுக்கிறது. இந்த நதிகளில் எங்குமே தடுப்பணைகள் இல்லை. இதனால் பருவமழை காலங்களில் அதிகளவில் நீர் ஓட்டம் இருந்தாலும் 5 மணி நேரத்தில் அவை அணைகளுக்கு சென்று விடும். இதனால் நீரின் வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்கு எந்தவித பயனும் இல்லை.
இவ்வாறு ஓடும் போது கருவேல மரங்களில் பாலிதீன் கழிவுகள் சிக்கி கொண்டுள்ளன. இவை பல ஆண்டுகள் மக்காமல் இருக்க போகின்றன. தொடர்ந்து நீரின் தன்மையை பாழ்ப்படுத்தும். நரிக்குடி வீரசோழனில் கிருதுமால் நதியில் பிளாஸ்டிக் குப்பை கொட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையை கவனிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் இன்னும் பாலிதீன் கழிவுகள் அதிகரிக்கும். இதற்கு தீர்வே இல்லாமல் போனால் நீரை சேமிப்பது என்பதும், வருங்காலங்களில் துார்வாருவதும் பெரும் சிரமமாக தான் இருக்கும். இதை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

