ADDED : அக் 26, 2024 04:43 AM
அருப்புக்கோட்டை: பூலாங்கால் துணை சுகாதார நிலையத்தை அரசு ஆரம்ப சுகாதார மையமாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பூலாங்கால் ஊராட்சி. ஒவ்வொரு 5 ஆயிரம் மக்கள் தொகை கணக்கு எடுப்பின்படி ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும்.
அதன்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு பூலாங்கால் ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு சுகாதார செவிலியர்கள் மட்டும் வந்து செல்வர்.
கிராமத்தில் பிறப்பு இறப்பு கணக்கெடுப்பு, கர்ப்பிணிகளை பரிசோதித்தல், உட்பட பணிகளை செய்வர். தடுப்பூசிகள் போடப்படும்.
ஒவ்வொரு வாரமும் வந்து செல்வர் சிறிய அளவில் ஏற்படும் விபத்து காயம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பர்.
இதனால் மக்கள் காய்ச்சல், விஷக்கடிகள், விபத்து ஏதாவது ஏற்பட்டால் 7 கி.மீ., தூரத்தில் உள்ள பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
பிரச்சனை
பூலாங்கால் சுற்றியுள்ள பகுதிகளில் வாமபுரம், வடக்குப்பட்டி, புதுகிராமம், கீழ பூலாங்கால், கீழ்க்குடி, புரசலூர் பெரிய மனக்குளம் உட்பட 25க்கும் மேற்பட்ட துணை கிராமங்கள் உள்ளன.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவம் மற்றும் பிற வேலைகளுக்கு தாய் கிராமமாக பூலாங்கால் உள்ளது.
அவசரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் பூலாங்கால் துணை சுகாதார நிலையத்தில் எந்தவித வசதிகளும் இல்லை.
உடன் அருகில் உள்ள பரளச்சி சுகாதார நிலையம் அல்லது 45 கி.மீ., தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது.
இங்குள்ள துணை சுகாதார நிலையத்தை 25க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி, வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும்.
தரம் உயர்த்தப்பட வேண்டும்
காசிம் முஸ்தபா, தொழிலதிபர்: சுற்றியுள்ள ஏழை கிராமம் மக்களின் நலன் கருதி பூலாங்காலில் உள்ள துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நவீன வசதிகள் செய்து தர வேண்டும்.
நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமாகி வருவதால் இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமாகிறது.
இதற்கான நிலத்தை கூட ஊர் மக்கள் தர தயாராக உள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வசதி இல்லை
சாகுல் அமீது, ஜமாத் தலைவர் : பூலாங்கால் தான் சுற்றியுள்ள 25 கிராமங்களுக்கு தாய் கிராமமாக உள்ளது.
அவசர சிகிச்சை கூட ஆம்புலன்ஸ்சை தேடி ஓட வேண்டியுள்ளது.
அரசு மருத்துவமனை 42 கி.மீ., தூரம் தள்ளி செல்ல வேண்டியுள்ளது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது அவசியமாக உள்ளது. இங்கு அமைந்தால் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஊர் மக்கள் இடம் தர தயாராக உள்ளனர். அரசு தான் மனது வைக்க வேண்டும்.