ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய, மாநில, நகராட்சி ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டும், டூவீலர் ஸ்டாண்டுகளாக மாறியதால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட எளிதாக வந்து செல்ல முடியாத அளவுக்கு நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் நடந்து செல்லக்கூட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நகரின் மையப் பகுதியில் பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வங்கி, நகைக் கடைகள் இருப்பதால் அதிகளவில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் உள்ளது.
இப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் முழுவதும் ரோட்டோர வியாபாரிகளாலும், டூவீலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாசல் முதல் ஆண்டாள் கோயில் வரை கடைகள் போட்டி போட்டு ஆக்கிரமித்தும், தள்ளுவண்டிகள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் மக்கள் நடந்து செல்ல கூட சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் டூவீலர்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள ரோடுகளில் ஆட்டோக்கள், மீன் கடைகள் இருக்கின்றன.
நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் டூவீலர்கள் இரண்டு அடுக்காக நிறுத்தப்படுகிறது. இதனால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட எளிதாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதேபோல் அரசு பஸ் டிப்போ முதல் ராமகிருஷ்ணாபுரம், உழவர் சந்தை, சர்ச் சந்திப்பு, தேரடி, திருப்பாற்கடல் வளைவு பகுதியில் கனரக வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் பள்ளி மாணவர்கள் ரோட்டை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சர்ச் சந்திப்பு முதல் முதலியார்பட்டி தெரு வரை ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடக்கு ரத வீதியில் பல தனியார் மருத்துவமனைகள் உள்ள நிலையில், டூவீலர்கள், கனரக வாகனங்களால் ரோடுகள் ஆக்கிரமித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகரின் ஒவ்வொரு தெருக்கள், நகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலை ரோடுகளின் வளைவு பகுதியில் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
தேவை சென்டர் மீடியன்
-சமுத்திரம், சுயதொழில் முனைவோர்: நகரில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் ஒவ்வொரு ரோட்டிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
தினமும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-தர்மராஜ், சுயதொழில் முனைவோர்: பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி உள்ள ரோடுகளில் இருவழிப்பாதையாக வாகனங்கள் சென்று வந்த நிலையில் தற்போது ஆட்டோ கூட சிரமமின்றி செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.