ADDED : டிச 06, 2025 10:09 AM

சாத்துார்: சாத்துார் சிவன் கோயில் வடக்கு ரதவீதியில் பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து காய்கனி வியாபாரிகள் கடை அமைத்து உள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் நடந்து செல்ல கூட பாதை இன்றி நெரிசலில் சிக்கி அவதிப்படும் நிலை உள்ளது.
சிவன் கோயில் வடக்குரத வீதி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சிவன் கோயில் தெப்பக்குளம் அருகில் இருந்த காலி இடத்தில் காய்கனி மார்க்கெட் கடைகள் கட் டியது.
சுமார் 30 கடைகள் இந்த பகுதியில் செயல்பட்டு வந்த நிலையில் சிவன் கோயில் வடக்கு ரத வீதி என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி இதன் பின்னர் காய்கனி மார்க்கெட் தெரு என மாறிவிட்டது.
நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் இந்த பகுதியில் உள்ளது.காய்கனி மார்க்கெட் திறக்கப்பட்ட பின்னர் மார்க்கெட்டிற்கு லாரிகள் மூலம் காய்கனிகள் கொண்டு வந்து காலை மாலை நேரங்களில் இறக்கி வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இந்த தெரு மாறியது.
தற்போது சுமார் 50 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் லாரி சென்று வந்த சிவன் கோயில் வடக்கு வீதி முழுவதும் காய்கறி கடை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
லாரி, வேன் சென்று வந்த இந்த பகுதியில் தற்போது குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தை கூட கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. காலை 8 : 00 மணிக்கு துவங்கி இரவு 10:00 மணி வரை வியாபாரிகளால் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இந்த தெருவில் சைக்கிளில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
போட் டி போட்டுக் கொண்டு வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களை கண்டுகொள்வதில்லை.
க டந்த ஆண் டு பருவமழை காலத்தின் போது நகராட்சி கட்டி வாடகைக்கு விட்டிருந்த மார்க்கெட் கடையின் கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து அங்கிருந்த கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டு சேதம் அடைந்த நகராட்சி கட்டடம் அகற்றப்பட்டது.
இங்கிருந்த கடைக்காரர்களும் தற்போது சாலை ஓரத்தை ஆக்கிரமித்து கடைகள் போட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அடிக்கடி அகற்றி வந்த நகராட்சி நிர்வாகம் தற்போது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதில் அக்கறை காட்டவில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
நெரிசல் காரணமாக அடிக்கடி வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பால் திணறல் மோகன், தனியார் நிறுவன ஊழியர்: சிவன் கோயில் வடக்கு ரத வீதி, குறுக்கு தெருவிலும் கூறை வேய்ந்து காய்கறி கடைக்காரர்கள் கடை அமைத்து உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தால் அதை அவர்களே நகர்த்தி வேறு இடத்தில் வைத்து விடுகின் றனர்.
இதனால் குடியிருப்பவருக்கும் வியாபாரிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாவதைக் கண்டு பலர் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டனர்
ரோட்டில் வியாபாரம் சங்கரேஸ்வரன், தனியார் நிறுவன ஊழியர்: சிவன் கோயில் வடக்குரத வீதியில். பெயருக்கு கட்டடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ரோட்டில் காய்கறிகளை தார்ப்பாயில் பரப்பி விரித்து வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
நகராட்சி அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு கடைக்குள் மட்டும் வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளும் தற்போது கட்டுப்பாடு இன்றி ரோட்டில் காய்கறிகளை தார்பாயில் பரப்பி வைத்து போட்டி போட்டு வியாபாரம் செய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். நகராட்சியில் பலர் ஆக்கிரமிப்பு குறித்து புகார் கொடுத்த போதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இதனால் இந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
தீ ர்வு சிவன் கோயில் வடக்குரத வீதி முழுவதும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சம் இன்றி நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்குள் வைத்து பொருட்களை விற்கவும் உத்தரவிட வேண்டும் இதுவே அந்தப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும்.

