ADDED : மார் 21, 2026 07:53 AM

சாத்துார்: சாத்துார் சிவன் கோயில் வடக்கு ரதவீதியில் பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து காய்கனி வியாபாரிகள் கடை அமைத்து உள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் நெரிசலால் அவதிப்படுகின்றனர்.
சிவன் கோயில் வடக்குரத வீதி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. 45 ஆண்டு களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சிவன் கோயில் தெப்பக்குளம் அருகில் இருந்த காலி இடத்தில் காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டி விட்டது.
சுமார் 30 கடைகள் இந்த பகுதியில் செயல்பட்டு வந்த நிலையில் சிவன் கோயில் வடக்கு ரத வீதி என அழைக்கப்பட்ட இந்த பகுதி இதன் பின்னர் காய்கனி மார்க்கெட் தெரு என மாறிவிட்டது.
நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் இந்த பகுதியில் உள்ளது. காய்கனி மார்க்கெட் திறக்கப்பட்ட பின்னர் மார்க்கெட்டிற்கு லாரிகள் மூலம் காய்கனிகள் கொண்டு வந்து காலை மாலை நேரங்களில் இறக்கி வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இந்த தெரு மாறியது. இதனால் இந்த பகுதியில் வீடுகள் கட்டி வசித்து வந்தவர்கள் தங்கள் வீடுகளை கடை களாக மாற்றி வாடகைக்கு விட்டனர்.
தற்போது சுமார் 50 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன் கோயில் வடக்கு ரத வீதி முழுவதும் காய்கறி கடை வியாபாரி களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
லாரி, வேன் சென்று வந்த இந்த பகுதியில் தற்போது வசிப்பவர் களால் சைக்கிள், டூவீலரை கூட கொண்டு செல்ல முடியவில்லை. போட்டி போட்டுக் கொண்டு வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அடிக்கடி அகற்றி வந்த நகராட்சி நிர்வாகம் தற்போது அகற்றுவதில் அக்கறை காட்டவில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
நெரிசல் காரணமாக அடிக்கடி வியாபாரிகளுக்கு மக்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை யும் ஏற்படும் நிலை உள்ளது.
நெரிசலால் அவதி மோகன், தனியார் நிறுவன ஊழியர்: சிவன் கோயில் வடக்கு ரத வீதி, குறுக்கு தெருவிலும் கூரை வேய்ந்து காய்கறி கடைக்காரர்கள் கடை அமைத்து உள்ளனர். இந்தப் பகுதி யில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் டூவீலரை நிறுத்தி இருந்தால் அதை அவர்களே நகர்த்தி வேறு இடத்தில் வைத்து விடுகின்றனர். இதனால் குடியிருப்பவருக் கும் வியாபாரிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. நெரிசல் நாளுக்கு நாள் அதிகமா வதைக் கண்டு பலர் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டனர்.
ரோட்டில் காய்கறிகள் சங்கரேஸ்வரன், வியாபாரி: சிவன் கோயில் வடக்குரத வீதியில் காய்கறி கடை வாழைத்தார் கடைகள் அதிக அளவில் உள்ளன. பெயருக்கு கட்டடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ரோட்டில் காய் கறிகளை தார்பாயில் பரப்பி வைத்து வியா பாரம் செய்கின்றனர்.
நகராட்சி அதிகாரி களுக்கு கட்டுப்பட்டு கடைக்குள் மட்டும் வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளும் தற்போது கட்டுப்பாடு இன்றி ரோட்டில் காய்கறிகளை பரப்பி போட்டி வியா பாரம் செய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நகராட்சி அதிகாரி களும் இதை கண்டு கொள்வதில்லை. மக்கள் தான் அவதிப்படு கின்றனர்.
