பிரச்னையும் தீர்வும் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நிற்காத ரயில்கள் கிராமப்புற முன்னேற்றம் பாதிப்பு
பிரச்னையும் தீர்வும் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நிற்காத ரயில்கள் கிராமப்புற முன்னேற்றம் பாதிப்பு
ADDED : செப் 11, 2026 05:33 PM
நரிக்குடி, செப். 12-
நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்லாததால் அப்பகுதி பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் இப் பகுதிகளின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி உள்ளது.
நரிக்குடி மிகவும் பின்தங்கிய பகுதி. முழுக்க விவசாயம் நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் வளர்ச்சியில் அப்பகுதி முன்னேற்றம் காண , விருதுநகர், அருப்புக்கோட்டை , திருச்சுழி, வழியாக மானாமதுரை வரை ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, நரிக்குடியில் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். ரயிலில் பயணம் செய்து பல்வேறு ஊர்களில் வணிகத்தை ஆர்வமுடன் செய்து வந்தனர். அப்போது பொருளாதார வளர்ச்சி மேம்படும் சூழல் இருந்தது. விளை பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் பார்த்து பொருளாதாரம் ஈட்டினர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மீட்டர் கேஜ் பாதையாக இருந்ததை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது . பணிகள் முடிவடைந்து மீண்டும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டும் நரிக்குடியில் ரயில்கள் நின்று செல்வதை தவிர்த்தனர். பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நரிக்குடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு குண்டும் குழியுமாகி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து ரோடு இருக்கும் அடையாளம் இன்றி போனது. ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் என எதுவும் கிடையாது. வெறிச்சோடி கிடக்கிறது. அப்பகுதி மக்கள் பஸ் பயணத்தை நாட வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் நேரம், பணம் விரையமாகிறது. விளைப் பொருள்களை கொண்டு செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. கிராமப்புற முன்னேற்றத்தை மனதில் கொண்டு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடவடிக்கை வேண்டும் :
மாரீஸ்வரன், தனியார் ஊழியர்.
62 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்த ஸ்டேஷனில் பயணிகள் அதிகம் பயன்படுத்தினர். 10 ஆண்டுகளுக்கு முன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லா விட்டாலும் பரவாயில்லை. பாசஞ்சர் ரயில்களாவது நின்று சொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சில ரயில்களையாவது நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் .
வளர்ச்சி கேள்விக்குறி
சிவா, தனியார் ஊழியர்.
காலத்திற்கு ஏற்ப பயணிகளுக்கான ரயில் சேவைகளை விரிவு படுத்தாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற மக்களின் போக்குவரத்து பாதிப்பால் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. முன்னேற்றம் பாதிக்கப்படுவதால் பலர் புலம்பெயர்ந்து செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் நரிக்குடி பகுதியில் ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பதுடன் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு:
62 ஆண்டுகள் கடந்தும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. கிராமப்புறங்களின் முன்னேற்றம் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம். விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரயில் சேவை இருந்தால் விவசாய பொருட்களை எளிதில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் பொருளாதாரம் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். இனியாவது அப்பகுதி வளர்ச்சியை கருத்தில் கொண்டு நரிக்குடி ரயில் நிலையத்தை நவீனப்படுத்தி கூடுதல் ரயில் சேவைகளை வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
