ஸ்ரீவில்லிபுத்துார் : ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெருக்கடிகளால் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போதைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், தனியார் மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வங்கிகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள் இருக்கிறது.
இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும், ராஜபாளையம், திருத்தங்கல், சிவகாசி பகுதிகளை சேர்ந்த மக்களும் அதிக அளவில் ஸ்ரீவில்லிபுத்துார் வந்து செல்கின்றனர்.
இதனால் பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியிலும் சுற்றியுள்ள ரோடுகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
ரோட்டில் இரு புறமும் நிறுத்தப்படும் டூவீலர்களால் பஸ்கள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
தற்போது பஸ் ஸ்டாண்டின் கிழக்குப் பகுதியில் புதிய கடைகள் கட்டுவதற்காக, பழைய கடைகள் இடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிற்கக் கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். பஸ்களும் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனையில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் வரை கார், வேன்கள் நிறுத்தப்படுவதாலும், உழவர் சந்தை ரோட்டில் மீன் கடைகள் இருப்பதாலும் ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை.
பள்ளிவாசல் முதல் ஆண்டாள் கோயில் வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ரோட்டோர கடைகள் வெள்ளைகோட்டை தாண்டி எல்லை மீறி வைக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் ஏராளமான டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. மினி பஸ்களும் தற்போது பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளதால் கூடுதல் இட நெருக்கடி காணப்படுகிறது. மக்கள் உட்கார இடமின்றி தவிக்கின்றனர்.
கட்டணமில்லா சுகாதார வளாகம் இடிக்கப்பட்டுள்ளதால் கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சிரமங்களை ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை கிருஷ்ணகுமார்: பஸ் ஸ்டாண்டிலும், பஜார் வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து மக்கள் நடந்து செல்ல சிரமத்தை சந்திக்கும் நிலை காணப்படுகிறது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல முடியவில்லை.
அடிக்கடி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் ஆக்கிரமிப்பாளர்கள் எல்லை மீற மாட்டார்கள்.
போக்குவரத்து நெருக்கடியினால் வெளியூர் பஸ்கள் தற்போது பஸ் ஸ்டாண்ட்டிற்கு வராமல் சென்று விடுகிறது. அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வசதியாக ஆக்கிரமிப்புகளையும், போக்குவரத்து நெருக்கடியையும் அரசு நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
நெரிசலால் சிரமம் மாரிமுத்து: ஸ்ரீவில்லிபுத்துாருக்கு தினமும் ஏராளமான வெளியூர் மக்கள் வந்து செல்லும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மட்டுமின்றி பஜார் வீதியில், ரத வீதிகளிலும் எளிதில் செல்ல முடியவில்லை. வடக்கு வீதியில் பல மருத்துவமனையில் உள்ள நிலையில் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் எளிதில் சென்று வர முடியவில்லை.
நகரின் அனைத்து ரோடுகளின் இருபுறமும் டூவீலர்கள், கனரக வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு அரசு நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.