தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்


ADDED : செப் 04, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளாட்பார்ம் கூரை, குடிநீர் , தெருவிளக்கு வசதிகள் அவசியம்

*சாத்துார் ரயில்வே ஸ்டேஷனின் பரிதாப நிலை

சாத்துார், செப் 5-

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் முழுமையான கூரை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் சாத்துார் தாலுகா மட்டுமின்றி வெம்பக்கோட்டை தாலுகா, ஆலங்குளம், சிவகாசி தாலுகா பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது.

ஆலங்குளம், சிவகாசி, எதிர்க்கோட்டை, வெம்பக்கோட்டை, மீனம்பட்டி, விருதுநகர் தாலுகாவுக்கு உட்பட்ட இ. முத்துலிங்கபுரம், நடுவப்பட்டி, வேப்பிலைப்பட்டி, எட்டூர் வட்டம் , உள்ளிட்ட கிராம மக்களும் வட மாநிலங்களுக்கும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்வதற்கு சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்கின்றனர்.

நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்லும் நிலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியூர் செல்லவும் உள்ளூர் திரும்பியும் வருகின்றனர்.

ஆனால் இங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பிளாட்பாரங்களில் உள்ள தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் கையில் உள்ள அலைபேசி விளக்கின் ஒளியை பயன்படுத்தி நடந்து வரும் நிலை உள்ளது. முதல் பிளாட்பாரத்தில் வடபகுதியில் முழுமையாக பயணிகள் கூரை அமைக்கப்படவில்லை.

ரயில் இன்ஜின் பகுதியில் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் வெயிலில் காத்திருந்து ரயிலில் ஏறும் நிலை உள்ளது. மழைக்காலத்தில் இந்த பகுதியில் ஒதுங்குவதற்கு ஒரு மர ம் கூட கிடையாது.

2வது , 3வது பிளாட்பாரங்களிலும் இதே போன்ற நிலை தான் உள்ளது. 2வது, 3வது பிளாட்பாரங்களில் தொடர்ச்சியாக கூரை அமைக்கப்படாமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

பகல் நேரங்களில் 2, 3 வது பிளாட்பாரங்களில் வந்து இறங்கும் பயணிகள் தகிக்கும் வெயிலில் இறங்கி நடந்து வந்து வெளியேறும் நிலை உள்ளது.

ரயில் நிலையம் முழுவதும் குடிநீருக்காக குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல இடங்களில் தண்ணீர் வரவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயணிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறை

ஆண்கள் பெண்கள் பயன்படுத்தும் கட்டணக் கழிப்பறை செயல்படாமல் மூடி கிடக்கிறது. இலவச கழிப்பறைகளிலும் தண்ணீர் வரவில்லை. தற்போது தான் மினரல் வாட்டர் பிளாண்ட் மிஷின் இறக்கி உள்ளனர். இது செயல்பாட்டிற்கு வந்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைவார்கள். தற்போது பழைய ஸ்டேஷன் மாஸ்டர் அறை அருகில் உள்ள ஒரே ஒரு மினரல் வாட்டர் பிளாண்ட் மட்டும் செயல்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமதுமைதீன், சாத்துார்.

மின்விசிறிகள், விளக்குகள் செயல்படவில்லை

தட்கல் டிக்கெட் எடுக்கும் வரிசையில் உள்ள மின்விசிறிகள் செயல்படாமல் உள்ளன.முதல் பிளாட்பாரத்தில் முழுமையாக பயணிகள் கூரை இல்லை.அடிக்கடி விளக்குகள் பழுதாகி விடுவதால் இரவு நேரத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 2, 3வது பிளாட்பாரங்களில் கூரை வசதியும் ,தெருவிளக்கு வசதியையும் அதிகப்படுத்தி தரவேண்டும். வசதி குறைவு காரணமாக பலரும் கோவில்பட்டி,விருதுநகர் சென்று ரயில் பயணம் மேற்கொள்கின்றனர்.

சங்கரேஸ்வரன், சாத்துார்.

தீர்வு

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனை தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தேவையான நிதி ஒதுக்கி பயணிகளுக்கு முழுமையாக நிழல் தரும் வகையில் கூரை,விளக்குகள் பழுதானால் உடனடியாக சீரமைக்கவும்,குடிநீர் மினரல் வாட்டர் பிளாண்டுகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்தி குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் வேண்டும். இதன் மூலம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தி வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் ரயில்வேக்கும் வருமானம் அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us