/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ...: தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் மானியம் நிறுத்தம்
/
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ...: தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் மானியம் நிறுத்தம்
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ...: தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் மானியம் நிறுத்தம்
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ...: தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் மானியம் நிறுத்தம்
ADDED : ஜூலை 19, 2025 12:30 AM

ராஜபாளையம்: கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் நீதி குழு மானியம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதனால் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை32, ராஜபாளையம் 36, காரியாபட்டி 36, சாத்துார் 46, சிவகாசி 54, திருச்சுழி 40, நரிக்குடி 44, வத்திராயிருப்பு 27, விருதுநகர் 58, வெம்பக்கோட்டை 48, ஸ்ரீவில்லிபுத்தூர் 29, என மொத்தம் 11 ஒன்றியங்களில் 450 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகள் இட தீர்வை மட்டுமே மூல நிதி ஆதாரம். தொழில் நிறுவனங்கள், குவாரிகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றின் மூலம் வரி வருவாய் கிடைத்து வருகிறது.
மேலும் மத்திய நிதிக்குழு மானியம் மூலம் ஊராட்சியின் மக்கள் தொகை, பரப்பளவு, நிர்வாகத்திறன், பின் தங்கிய பகுதிகள், ஆதிதிராவிடர் மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ரூ.3 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இது தவிர நிர்வாக திறன், வரி வசூல், மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் அடிப்படையில் சிறப்பு நிதி மத்திய அரசு சார்பில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி மூலம் ஊராட்சிகளில் சாலைகள், குடிநீர், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஊராட்சி நிர்வாகம் நிதி தன்னிறைவு பெறுகிறது.
ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருந்தால் மட்டுமே மத்திய அரசு நிதி குழு மானியம் உள்ளிட்ட நிதிகளை வழங்குகிறது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன. முதல் வாரத்துடன் நிறைவடைந்த நிலையில், 6 மாதங்களாக மத்திய நிதிக்குழு மானிய நிதி விடுவிக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் 2025- 2026 நிதியாண்டுக்கான மத்திய நிதி குழு மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் ஊராட்சிகளில் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நிலவி வருகிறது.
தொழில் நிறுவனங்கள் , குவாரிகள் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஓரளவு நிதி நெருக்கடியை சமாளித்தாலும், ஊரகப் பகுதிகளில் உள்ள சிறு ஊராட்சிகள் அன்றாட பணிகளை மேற்கொள்ளவே திண்டாடி வருகின்றன.
மாநில அரசு வழங்கி வந்த மாநில நிதிக்குழு மானியமும் குறைக்கப்பட்டு உள்ளதால் தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் குழாய் சீரமைப்பு, சாலை சீரமைப்பு, தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஊராட்சி நிர்வாகமே நடத்த அரசு உத்தரவிட்ட நிலையில், அரசு ரூ.30 ஆயிரம் வழங்கும் நிலையில், ஒரு முகாமிற்கு இணையதள வசதி, உணவு, பந்தல் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு ஆகிறது. கூடுதல் செலவையும் ஊராட்சி நிர்வாகமே ஏற்க அரசு அறிவுறுத்துவதால், ஊராட்சி செயலர்கள் செய்வதறியாது உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வரை, மாநில அரசு ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.