/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆத்திகுளத்திற்கு பள்ளி நேரங்களில் பஸ் கேட்டு மறியல்
/
ஆத்திகுளத்திற்கு பள்ளி நேரங்களில் பஸ் கேட்டு மறியல்
ஆத்திகுளத்திற்கு பள்ளி நேரங்களில் பஸ் கேட்டு மறியல்
ஆத்திகுளத்திற்கு பள்ளி நேரங்களில் பஸ் கேட்டு மறியல்
ADDED : டிச 20, 2024 02:25 AM

காரியாபட்டி: காரியாபட்டி ஆத்திகுளத்திற்கு காலை, மாலை பஸ்கள் இயக்க கோரி மக்கள் திருச்சுழி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரியாபட்டியில் இருந்து எஸ். தோப்பூர், சித்து மூன்றடைப்பு, அல்லிக்குளம், பி. புதுப்பட்டி வழியாக திருச்சுழிக்கு 7க்கும் மேற்பட்ட முறை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை 8:15 மணிக்கு ஒரு டவுன் பஸ் உள்ளது.
இதில் பள்ளி, திருச்சுழிகல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் உள்ள ஆத்திகுளம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது.
மழை நேரங்களில் நடந்து செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பஸ்சை பிடிக்க முடியாமல் போனால் மாணவர்கள் அன்று பள்ளி, கல்லூரிக்கு விடுப்பு தான் எடுக்க வேண்டும்.
மாலை நேரங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் ரோடு வழியாக நடந்து செல்ல வேண்டியதுள்ளதால் பெண்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளைகளிலாவது ஆத்திகுளம் கிராமத்திற்கு பஸ்வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
நேற்று ஆத்திரமடைந்த அக்கிராமத்தினர் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரியாபட்டி போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.