/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓய்வு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் உத்தரவிற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
/
ஓய்வு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் உத்தரவிற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ஓய்வு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் உத்தரவிற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ஓய்வு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் உத்தரவிற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 27, 2025 02:53 AM
விருதுநகர்:ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தலாம் என ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரயில்வே துறையில் நாடு முழுதும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கில் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் காலியாக உள்ள இடங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தலாம் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஊதிய நிலை 1 முதல் 9 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற ‛கெஜட்டட்' அல்லாத ஊழியர்களை அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் எந்த ஊதிய நிலையில் பணிபுரிந்தனரோ அதே நிலையில் அவரது விருப்பத்தின் பேரில் மீண்டும் பணியமர்த்தலாம்.
இவ்வாறு மீண்டும் அவர்களை பணியமர்த்தும் அதிகாரம் மண்டல தலைமையகத்தில் பொது மேலாளருக்கும், கோட்டங்களில் கோட்ட ரயில்வே மேலாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) உதவிக் கோட்டச் செயலாளர் ராம்குமார் கூறியதாவது: ரயில்வே காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது ஓய்வு ஊழியர்களை நிரப்பும் செயல் அரசின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. நாட்டில் படித்து வேலையின்றி இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களை பணியமர்த்தாமல் ஓய்வு பெற்ற ஊழியர்களை, அதே ஊதிய நிலையில், மீண்டும் பணியமர்த்துவது அரசுக்கு வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும் என்றார்.
தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) கோட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் கூறியதாவது: ரயில்வே துறையில் உள்ள காலியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனால் பணிபுரியும் ஊழியர்கள் விடுப்பு, ஓய்வு எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.