/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருகட்ட சுற்றுச்சாலை அமைக்க பரிந்துரை
/
இருகட்ட சுற்றுச்சாலை அமைக்க பரிந்துரை
ADDED : ஏப் 25, 2025 06:06 AM
சிவகாசி: சிவகாசியில் முதல் கட்ட சுற்றுச்சாலை பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் அடுத்த இரு கட்ட சுற்றுச்சாலை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். விரைவில் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.
சிவகாசியில் விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், எரிச்சநத்தம் ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள சுற்றுச்சாலை திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - விருதுநகர் ரோடுகளை இணைக்கும் வகையில் 9.92 கிலோமீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்கு மார்ச் 3 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 16 மாதங்களில் கட்டுமான பணிகளை முடித்து சுற்றுச்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த இருகட்டங்களில் சாத்துார் - சிவகாசி - கழுகுமலை ரோடு, சிவகாசி - ஆலங்குளம் ரோடு, சிவகாசி - கள்ளிசேரி ரோடு, விஸ்வநத்தம் - வெங்கடாசலபுரம் ரோடு உள்ளிட்டவைகள் சுற்றாக இணைக்கப்பட உள்ளது. இவற்றில் கீழ திருத்தங்கல், ஆணையூர் இரு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் செல்வதால் அந்த இரு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வடபட்டி, நமஸ்கரித்தான் பட்டி, கீழ திருத்தங்கல், அனுப்பன்குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் வெற்றிலையூரணி, ஆனையூர் ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கு நில ஒப்படைப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே எஞ்சியுள்ள பகுதிகளுக்கு வெளிவட்ட சுற்றுச்சாலை அமைக்க முன்மொழிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சாலை அமைய உள்ள இடங்களை விருதுநகர் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் காளிதாசன் அதிகாரிகள் பார்வையிட்டனர். இப்பணிகள் நடந்து வரும் நிலையில் இரண்டாவது கட்ட சுற்றுச்சாலை பணிக்காக அரசு ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.