உள்ளாட்சிகளில் சேதமடைந்த மேல்நிலை தொட்டிகளை அகற்றுங்க: இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அச்சத்தில் மக்கள்
உள்ளாட்சிகளில் சேதமடைந்த மேல்நிலை தொட்டிகளை அகற்றுங்க: இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அச்சத்தில் மக்கள்
UPDATED : அக் 27, 2026 06:46 AM
ADDED : அக் 26, 2026 05:46 PM

சாத்துார்: உள்ளாட்சிகளில் சேதம் அடைந்த நிலையில் பல மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன.கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் காணப்படும் மேல்நிலைத் தொட்டிகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அத்தொட்டிகளை பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்ட உள்ளாட்சிளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பல சேதமடைந்த நிலையில் உள்ளன. உள்ளூர் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் ஊருக்கு வெளியே இருந்த மேல்நிலை தொட்டிகளை சுற்றிலும் தற்போது புதியதாக குடியிருப்பு பகுதிகள் உருவாகியுள்ளன. வீடுகளில் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசுஅனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக திட்டம் தீட்டியது. இதன்படி
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தற்போது உள்ளாட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு புதியதாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பழைய சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதிய மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பழைய சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ளன.சில சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் சாலை ஓரங்களிலும் துவக்க பள்ளிகள் அருகிலும் அமைந்துள்ளது.
தொட்டிகளின் சிமெண்ட் பூச்சி பெயர்ந்த நிலையில் வீசும் காற்றுக்கு திடீரென சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. பல மேல்நிலைத் தொட்டிகளின் துாண்கள் பழுதான நிலையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன.
இவற்றின் அடியில் ஆடு மாடுகள் வளர்ப்பது மற்றும் மக்கள் ஓய்வு எடுப்பது, குழந்தைகள் விளையாடுவதும் தொடர்கதையாக உள்ளது.சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் இடிந்து விழுந்தால் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது.
பல ஊராட்சிகளில் போதுமான நிதி வசதி இல்லாத நிலையில் பாதுகாப்பாக தொட்டிகளை அகற்ற முடியாமல் செய்வதறியாது ஊராட்சி அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான நிதி ஒதுக்கி ஊராட்சி பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைத் குடிநீர் தொட்டிகளை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
