ADDED : ஆக 06, 2025 08:41 AM

சாத்துார் : பள்ளமான ரோடுகள், தேங்கும் மழை நீர், திறந்த வெளி கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை இல்லாதது உட்பட பல்வேறு பிரச்னைகளால் சாத்துார் அண்ணாநகர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் அசோக் குமார், புகாரி, தனுஷ்கோடி, பழனிச்சாமி, சண்முகப்பாண்டியன், சூர்யா, ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது
அண்ணா நகர் நகரில் வர்த்தக நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன குடியிருப்பு வீடுகளும் அதிக அளவில் உள்ளது. இங்கு பெரும்பான்மையான குறுக்கு தெருக்களில் ரோடு வசதி இல்லை.பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் திட்டம் என பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் மீண்டும் சீர் செய்யப்படாததால் மேடு பள்ளமாக கரடு முரடாக உள்ளது.
பள்ளமேடு தெரியாமல் இரவு நேரத்தில் நடமாடும் முதியவர் கள், சிறுவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இந்தப் பகுதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுகாதார வளாகம் இல்லாத நிலை காலியாக உள்ள இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஏற்கனவே இலவச கழிப்பறையாக இருந்த பெண்கள் கழிப்பறை தற்போது கட்டணக் கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது ஆனால் இங்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை அடிக்கடி பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.
மழைக்காலத்தில் பெண்கள் அவதிப்படுகின்றனர்.மழைக்காலத்தில் பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். நகராட்சியில் பலமுறை கழிப்பறையை திறக்க வலியுறுத்தி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அண்ணாநகர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க அவதிப்படுகின்றனர்.
சிறுநீர் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்று கூறியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அண்ணா நகர் 2வது தெருவில் ரோடு வசதி இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இங்கு ரோடு போட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
பேவர் பிளாக் ரோடு போட்டுள்ளனர். ஆனால் மழைநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதியில்லை.
இதனால் பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகிறது.
பஸ் ஸ்டாப் வசதி இல்லாத நிலையில் பயணிகள் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்தும் பஸ் ஏறிச் செல்கின்றனர். பயணிகள் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. படித்த இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் வசதியாக இங்கு நுாலகம் ஒன்று அமைக்க வேண்டும், என்றனர்.