ADDED : ஜன 28, 2026 05:52 AM

சிவகாசி: தெருக்களில் ரோடு சேதம், சுவையற்ற குடிநீர், பயன்பாட்டிற்கு வராமல் சேதமான சுகாதாரவளாகம், என சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் சிவாஜி நகர் குடியிருப்புவாசிகள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
இப்பகுதி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் நந்தினி, நிர்மலா தேவி, சண்முகத்தாய், குருவம்மாள், மாரியம்மாள் கூறியதாவது, இங்குள்ள தெருக்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு போடப்பட்ட நிலையில் தற்போது ரோடு மண்பாதையாக உள்ளது.
வாறுகால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி தெரு முழுவதுமே சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றது.
இதில் நடந்து செல்லவே மிகவும் சிரமப்படுகின்றோம். திருத்தங்கல் மெயின் ரோட்டில் இருந்து இ.பி., அலுவலகம் திருப்பதி நகர் செல்லும் ரோடு மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது.
இப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் இல்லை. வினியோகம் செய்யப்படுகின்ற தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. வடக்கு தெரு தெப்பம் அருகே 20 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்து விட்டது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சிவகாசி ரோட்டில் உள்ள தெப்பம் துார்வாரப்பட்டுள்ள நிலையில் அதற்கு தண்ணீர் வரும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைத்து மழைநீர் வருவதற்கு வழி செய்ய வேண்டும்.
என்.ஜி.ஓ., காலனியில் இருந்து பெரியகுளம் கண்மாய் செல்லும் ஓடை முழுவதும் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக துார்வார வேண்டும் என்றனர்.

