/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்புப் பகுதிகள், தகர செட்களில் பட்டாசு தயாரிப்பு
/
குடியிருப்புப் பகுதிகள், தகர செட்களில் பட்டாசு தயாரிப்பு
குடியிருப்புப் பகுதிகள், தகர செட்களில் பட்டாசு தயாரிப்பு
குடியிருப்புப் பகுதிகள், தகர செட்களில் பட்டாசு தயாரிப்பு
ADDED : ஏப் 17, 2025 05:33 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளிலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தகர செட் அமைத்தும், பட்டாசு கடை அருகிலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது தவிர 2000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்குகின்றன.
கடந்த காலங்களில் சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாக சிலர் பட்டாசு தயாரித்தனர். தவிர பட்டாசு கடை அருகிலும் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டது. இங்கு எந்த வித பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை.
இது போன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுக்கப்படுகின்றது. அதே சமயத்தில் அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண உதவி கிடைக்க வாய்ப்பில்லை.
கடந்த காலங்களில் சாத்துார் அச்சங்குளம் பட்டாசு கடையில் சட்ட விரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் அதே பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார்.
திருத்தங்கல் பெரியார் காலனியில் குடியிருப்பு பகுதியில் அட்டை தயாரிக்க அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணி மருந்து பதுக்கி பேன்சிரக பட்டாசு தயாரிக்கப்பட்டது. இங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
குடியிருப்பு பகுதிகளில் வெடி விபத்து ஏற்பட்டால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். 2025ம் ஆண்டு தீபாவளிக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி துவங்கி நடந்து வருகின்றது.
அதே சமயத்தில் சட்ட விரோதமாகவும் ஒரு சிலர் பட்டாசு தயாரித்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்த பின்னரே அதிகாரிகள் ஆய்வு செய்யும் வழக்கம் உள்ளது. இதனை தவிர்த்து குடியிருப்பு பகுதி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.