ஸ்ரீவில்லிபுத்தூர்,: வீடுகள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் மாற்று பாதை இல்லாமல் சிரமம், புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு, வாறுகால், மின்விளக்குகள் அமைத்தல், ரேஷன் கடை, பஸ் ஸ்டாப் போன்ற வசதிகள் செய்து தர வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகர் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சங்க தலைவர் ஜெகநாதன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூறியதாவது;
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ஆண்டுதோறும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் முக்கிய பகுதியாக தன்யா நகர் உள்ளது. தற்போது 500 வீடுகளுக்கும் மேல் உள்ளது.
ஆண்டுக்காண்டு இப்பகுதியில் வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் காளையார் குறிச்சி தெருவில் இருந்து வருவதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது. இதன் வழியாகத்தான் 500 வீடு மக்களும் பயணிக்க வேண்டியது உள்ளது.
அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க திருப்பாற்கடல் தெற்கு பகுதி வழியாக தாலுகா அலுவலகத்தை இணைக்கும் வகையில் கூடுதல் பாதை வசதி செய்து தர வேண்டும்.
இதனால் இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வது குறையும். விபத்துக்கள் தடுக்கப்படும்.
பல்வேறு மெயின் தெருக்களில் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டுள்ள நிலையில் சில குறுகிய தெருக்களில் மண் தரையாக உள்ளதால் மழைநேரத்தில் சகதி ஏற்படுகிறது. இதேபோல் புதிய குடியிருப்பு பகுதிகளிலும்
வாறுகால், ரோடு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிகளில் வாறுகால், ரோடு வசதி செய்து தர வேண்டும்.
தன்யா நகருக்கு என தனியாக ஒரு ரேஷன் கடை வேண்டும். குழந்தைகளுக்காக ஒரு சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும்.
வெளியூரில் பணியாற்றுவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ள நிலையில் தன்யா நகருக்கென ஒரு பஸ் ஸ்டாப்பை உருவாக்கி மதுரை, ராஜபாளையம் செல்லும் பஸ்கள் நின்று செல்ல அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரான நாட்களில் குடிநீர் வினியோகம், தினசரி தூய்மை பணி, கொசு தொல்லையை ஒழிக்க மருந்து அடித்தல் போன்ற அடிப்படைப் பணிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.