/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் குழாய் பணிகள் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்
/
குடிநீர் குழாய் பணிகள் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்
குடிநீர் குழாய் பணிகள் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்
குடிநீர் குழாய் பணிகள் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்
ADDED : டிச 22, 2024 07:31 AM
விருதுநகர்: விருதுநகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளைச் சரிவர செய்யாத ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டுமென நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் நகராட்சியில் அவரசக் கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
லோக்சபாவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காங். கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் ஏகமனதாக நிறைவேற்றினர்.
விருதுநகர் முழுவதும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவங்கப்பட்டது. இப்பணி துவங்கிய இடங்களில் பணிகள் திருப்திகரமாக நடக்கவில்லை. தோண்டப்பட்ட ரோடுகளை சரியாக சீரமைக்கவில்லை. பணிகள் மிகவும் மந்தகதியில் நடக்கிறது. எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
முத்துராமன், தி.மு.க.,: ஏற்கனவே உள்ள டெண்டரை ரத்து செய்தால் நிதி திரும்ப சென்று விடும். பின்பு நிதி கிடைக்க பல ஆண்டுகள் ஆகி விடும். எனவே, அதே ஒப்பந்தகாரர் மூலம் பணியை தொடரலாம்.
ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மறு ஒப்பந்தம் வழங்கிட நடவடிக்கை எடுக்கலாம்.
மாதவன், நகராட்சித் தலைவர்: அந்த ஒப்பந்தகாரர் பணியை செய்ய மறுக்கிறார். தன்னால் பணியை செய்ய முடியாது என தெரிவித்து விட்டார். சரிவர பணிகள் நடைபெறவில்லையென பலமுறை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து அத்தீர்மானம் நிறைவேறியது.
மேலும் ரூ.100க்கும் குறைவாக உள்ள சொத்து வரியை விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக அளவில் உயர்த்தியுள்ளனர்.எனவே இதனைக் குறைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கவுன்சிலர்கள் கலையரசன், வெங்கடேஷ், சரவணன், மதியழகன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஹேமா, தி.மு.க.,: பேட்டரி வண்டி இன்றி தள்ளுவண்டி மூலம் குப்பை வாங்கும் பணி நடப்பதால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
மதியழகன், தி.மு.க.,: குப்பை வாங்கும் துப்புரவுத் தொழிலாளர்களை அடிக்கடி மாற்றம் செய்வதால் பணிகள் தொய்வடைகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.