/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைப்பாற்றில் வளர்ந்துள்ள முள்செடியால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம்
/
வைப்பாற்றில் வளர்ந்துள்ள முள்செடியால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம்
வைப்பாற்றில் வளர்ந்துள்ள முள்செடியால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம்
வைப்பாற்றில் வளர்ந்துள்ள முள்செடியால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம்
ADDED : நவ 02, 2025 11:59 PM

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் அடர்த்தியாக காடு போல் வளர்ந்துள்ள முள்செடியால் நீரோட்டம் பாதித்து குடியிருப்புக்குள் வெள்ளம்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முள் செடிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு பல கிராமங்களில் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் பெரிய கொல்லப்பட்டி கண்மாயின் நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. சங்கரநத்தம் செக்டேம் துவங்கி சாத்துார் செக்டேம் வரையில் ஆற்றில் அடர்த்தியாக முள்செடி முளைத்துள்ளன. ஆற்றில் தண்ணீர் வரும் போது முள் செடிகள் தண்ணீரின் போக்கை திசை திருப்பி விடுகின்றன.
இதனால் கடந்த ஆண்டு வெம்பக்கோட்டை அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டபோது ஆற்றில் வெள்ளம் அதிகரித்து மேலக் காந்தி நகர் , கீழக்காந்திநகர், குருலிங்கபுரம், அமீர்பாளையம் நகர், புதுப் பாளையம் நகர் ஆகிய குடியிருப்புகளுக்குள் பாய்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது வரை பருவமழை தீவிரம் அடையவில்லை. இன்னும் மழைக்காலம் உள்ளதால் மீண்டும் அணை திறக்கப்பட்டால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த ஆண்டு போல வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு காரணமாக இருப்பது ஆற்றில் காடு போல அடர்த்தியாக வளர்ந்துள்ள முள் செடிகள் தான். ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தடையின்றி செல்ல வேண்டும்.
ஆனால் ஆற்றுக்குள் வளர்ந்துள்ள முள் செடிகள் வெள்ளத்தில் சிக்கும் போது அதனை வேருடன் பிடுங்கப்பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டு வரும்போது ஓரிடத்தில் மொத்தமாக சேர்ந்து விடுவதால் செயற்கையாக தண்ணீரின் ஓட்டம் பாதிக்கப்பட்டு விடும். ஆற்றில் தொடர்ந்து செல்ல முடியாத நிலையில் வெள்ளம் முழுவதும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடும் நிலை ஏற்படுகிறது.
எனவே தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் நிலை உள்ளது மேலும் அவர்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடும்போது வீட்டில் உள்ள புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் நனைந்து விடும் அபாயமும் உள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் வளர்ந்துள்ள தண்ணீரின் போக்குக்கு தடையாக உள்ள முள் செடிகளை இயந்திரம் மூலம் அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

