UPDATED : ஜூலை 16, 2026 08:19 PM
ADDED : ஜூலை 16, 2026 08:00 PM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட முனியசாமி நகரில் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு முழுவதும் குட்டையில் தேங்கி நிரம்பியுள்ளது. இதனால் முனியசாமி நகர் 1வது, 2வது தெரு, நெற்குத்திப்பாறை உள்ளிட்ட பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகினர்.
குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி பல முறை மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியல் போராட்டத்தில் 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் துரைப்பாண்டியும், மக்களுக்கு ஆதரவாக ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குட்டையில் தேங்கிய கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுத்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
