/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம்
/
ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம்
ADDED : அக் 22, 2024 04:31 AM

சிவகாசி: தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம், சுகாதார வளாகம் செயல்படவில்லை என திருத்தங்கல் முத்துமாரி நகர் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் முத்துமாரி நகரில் தெருக்களில் ரோடு சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. தவிர வாறுகால் சேதத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. வாறுகால் முழுவதும் புழுக்கள் நிறைந்து காணப்படுகின்றது. முத்துமாரி நகர் மெயின் ரோடும் சேதம் அடைந்திருப்பதால் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. இங்குள்ள சுகாதார வளாகம் செயல்படவில்லை. இதனால் மக்கள் திறந்த வெளியினை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
கிருஷ்ணன்; தெருக்களில் ரோடு, வாறுகால் சேதமடைந்துள்ளது. வாறுகால் துார்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. இது குறித்து எத்தனையோ முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கருப்பு, குழாய் கடை; தெருக்களில் அதிகமான நாய்கள் நடமாட்டத்தால் பள்ளி மாணவர்கள், மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் வெளியில் விளையாட முடியவில்லை. தவிர பன்றிகளும் சாக்கடையில் புரண்டு அப்படியே குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் தொற்று நோய் ஏற்படுகின்றது. எனவே நாய்கள், பன்றிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், வெல்டிங் பட்டறை; இங்கு குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள குளம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிக்க, துணி துவைக்க என பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் குளத்தில் தேங்கி விட்டது. ஒட்டுமொத்த தண்ணீரும் கழிவுநீராக மாறியதால் இப்பகுதியில் மக்கள் குடியிருக்கவே முடியவில்லை. எனவே குளத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.