/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திட்டங்களில் நட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவது அவசியம்; மழை நேரம் வரை தாங்காமல் மடிந்த செடிகள் அதிகரிப்பு
/
திட்டங்களில் நட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவது அவசியம்; மழை நேரம் வரை தாங்காமல் மடிந்த செடிகள் அதிகரிப்பு
திட்டங்களில் நட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவது அவசியம்; மழை நேரம் வரை தாங்காமல் மடிந்த செடிகள் அதிகரிப்பு
திட்டங்களில் நட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவது அவசியம்; மழை நேரம் வரை தாங்காமல் மடிந்த செடிகள் அதிகரிப்பு
ADDED : அக் 30, 2024 04:39 AM
மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கம், ஊரக வளர்ச்சி முகமையின் சில திட்டங்கள் மூலம் மரக்கன்றுகள் பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் நடப்படுகிறது. இவை தவிர மேய்க்கால் நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் பல்வேறு பெயர்களில் அரசு மரக்கன்றுகளை நட்டு வருகிறது. ஒரு திட்டம் செயல்படுத்தும் போது இருக்கிற ஆர்வம், அது முழுமையடையும் வரை அதிகாரிகள் மத்தியில் இருப்பதில்லை. அதற்கான முழு செயல்பாடும் இருப்பதில்லை.
இவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பசுமை தமிழகம் இயக்கம் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள மாவட்ட நிர்வாகம் அதை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. பசுமை தமிழக இயக்கம் என்பது வனத்துறையின் திட்டம். ஆனால் இதில் வேளாண்துறையினரையும் நிர்பந்தித்து அலைக்கழிப்பதாக புகார் உள்ளது. வனத்துறையினரின் பெயரளவிலே பசுமை தமிழகம் இயக்க திட்டத்தில் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஏற்கனவே நான்கு வழிச்சாலைகளில் வனத்துறை மூலம் வைக்கப்பட்ட மரக்கன்றுகளில் 80 சதவீதம் பிழைத்து தற்போது வளர்ந்துள்ள நிலையில், 20 சதவீதம் மடிந்து போய்விட்டன. இதே நிலை தான் பல்வேறு நிலங்கள், அலுவலகங்களில் உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் நடப்படும் மரங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் பொது இடங்களில் அவை கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது.
பராமரிக்க ஆள் இல்லை. இதனால் தற்போது மழைக்காலம் வரை கூட இந்தாண்டு நடப்பட்ட மரங்கள் பிழைக்கவில்லை. 1 கோடி மரம் நடும் இலக்கு வைத்து செயல்படுவதில் தவறில்லை. அவ்வாறு செயல்படும் போது ஏற்கனவே நட்ட மரங்களை நல்ல முறையில் வைத்திருப்பது தான் சரியான நடைமுறையாக இருக்கும். மடிந்த செடிகளின் இடத்தில் புதிய செடிகளை நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. வெறுமனே மரக்கன்று நட்டு செல்வதில் பயனில்லை.
தன்னார்வ அமைப்புகள் தாங்கள் நடும் மரங்களை ஒவ்வொரு மாதமும் பார்க்கின்றனர். ஆனால் பொது இடங்கள், நிலங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை அவ்வாறு கவனிப்பாரில்லை. இதனால் ஏனோ தானோ என மரக்கன்றுகள் நடப்படுவதும், அவை மடிந்து போவதும் அதிகரித்துள்ளது.