/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி மேலாண்மை குழுக்களை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு: மறுக்கட்டமைப்புக்கு பின்னும் நடவடிக்கைகள் இல்லை
/
பள்ளி மேலாண்மை குழுக்களை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு: மறுக்கட்டமைப்புக்கு பின்னும் நடவடிக்கைகள் இல்லை
பள்ளி மேலாண்மை குழுக்களை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு: மறுக்கட்டமைப்புக்கு பின்னும் நடவடிக்கைகள் இல்லை
பள்ளி மேலாண்மை குழுக்களை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு: மறுக்கட்டமைப்புக்கு பின்னும் நடவடிக்கைகள் இல்லை
UPDATED : ஜன 05, 2026 10:48 AM
ADDED : ஜன 05, 2026 05:32 AM

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்து 24 உறுப்பினர்கள் வரை சேர்க்கப்பட்டும் செயல்பாடு மீண்டும் மந்தமாக தான்தொடர்கிறது. எனவே இவற்றை முழுவீச்சில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பள்ளிகள் உள்ளன. இவற்றில் மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. பெற்றோர், தலைமையாசிரியரை கொண்டு செயல்படும் இக்குழுக்கள் பலவீனமாக காணப்பட்டது. இக்குழுக்கள் மூலம் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், வளர்ச்சி பணிகள் செய்வதில் தொடர்ந்து தொய்வு நீடித்ததோடு,பெற்றோர் படிப்பறிவு இல்லாதவராக இருப்பதால் விவாதங்களில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்ய 2024 ஆகஸ்ட்டில் பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அதன் படி ஒரு பள்ளிக்கு 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் பொறுப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. துணை தலைவர் பொறுப்பில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோர்களாக உள்ள துாய்மை பணியாளர்கள், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.பள்ளி தரப்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, உள்ளாட்சி தரப்பில் அதன் இரு பிரதிநிதிகள், கல்வியாளராக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், ஓய்வு ஆசிரியர் என இருவரில் யாரேனும் ஒருவர்.
பெற்றோர் உறுப்பினர்களாக 13 பேர், சுய உதவிக்குழு உறுப்பினர்களாக ஒருவர், முன்னாள்மாணவர்கள் 4 என மொத்தம் 24 உறுப்பினர்களை கொண்டு புதிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டன.
தேர்தல் நடத்தியும், போட்டியின்றியும் பல்வேறு பள்ளிகளில்உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மறுகட்டமைப்புக்கு பின்னும் இவை முழுவீச்சில் செயல்படவில்லை. ஆர்வமுள்ள தலைமை ஆசிரியர்கள் இதை நன்கு பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் நிதி கிடைப்பதில் சுணக்கம் நீடிப்பது போன்ற காரணங்களால் குழுவில் தீர்மானம் போட்டவை அப்படியே கிடப்பில் உள்ளன.
இன்னும் பல பள்ளிகளில் 24 உறுப்பினர்களை நியமிக்க முடியாத சூழலும் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் வரும் ஆண்டில் இடைநிற்றலை குறைக்கவாவது பள்ளி மேலாண்மை குழுக்களின் செயல்பாடுகளை கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும்.

