பெயரளவில் கூட... இயங்காத பள்ளி மேலாண்மை குழுக்கள்: மறுகட்டமைப்பு செய்தும் பயனில்லை
பெயரளவில் கூட... இயங்காத பள்ளி மேலாண்மை குழுக்கள்: மறுகட்டமைப்பு செய்தும் பயனில்லை
ADDED : செப் 02, 2026 11:15 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்கள் 2024 ஆகஸ்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. புதிதாக 24 வகை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னும் முழுவீச்சில் இயங்காமலே உள்ளது. இதனால் பள்ளிக்கு தேவையான புதிய வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வுகள், அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.
மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. பெற்றோர், தலைமையாசிரியரை கொண்டு செயல்படும் இக்குழுக்கள் பலவீனமாக காணப்பட்டது. இக் குழுக்கள் மூலம் பள்ளி களுக்கு தேவையான வசதிகள், வளர்ச்சி பணிகள் செய்வதில் தொடர்ந்து தொய்வு நீடித்ததோடு, பெற்றோர் படிப்பறிவு இல்லாதவராக இருப்பதால் விவாதங்களில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்ய 2024 ஆகஸ்டில் பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அதன் படி ஒரு பள்ளிக்கு 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவர் பொறுப்பில் பெண் களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
துணை தலைவர் பொறுப்பில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோர்களாக உள்ள துாய்மை பணியாளர்கள், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற் றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
பள்ளி தரப்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, உள்ளாட்சி தரப்பில் அதன் இரு பிரதிநிதிகள், கல்வியாளராக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், ஓய்வு ஆசிரியர் என இருவரில் யாரேனும் ஒருவர். பெற்றோர் உறுப்பினர்களாக 13 பேர், சுய உதவிக்குழு உறுப்பினர்களாக ஒருவர், முன்னாள் மாணவர்கள் 4 என மொத்தம் 24 உறுப் பினர்களை கொண்டு புதிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டன.
தேர்தல் நடத்தியும், போட்டியின்றியும் பல்வேறு பள்ளிகளில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மறுகட்டமைப்புக்கு பின்னும் இவை முழுவீச்சில் செயல்படவில்லை. ஆர்வமுள்ள தலைமை ஆசிரியர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இருப்பினும் நிதி கிடைப்பதில் சுணக்கம் நீடிப்பது போன்ற காரணங்களால் குழுவில் தீர்மானம் போட்டவை அப்படியே கிடப்பில் உள்ளன. இன்னும் பல பள்ளிகளில் 24 உறுப்பினர்களை நியமிக்க முடியாத சூழலும் உள்ளன.
எனவே குறைகளை களைந்து புதிய அரசு இந்த கல்வியாண்டிலே குழுக்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும்.
