/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரண்டாவது நாளாக கண்மாய் ஓட்டை அடைக்கும் பணி --
/
இரண்டாவது நாளாக கண்மாய் ஓட்டை அடைக்கும் பணி --
ADDED : டிச 15, 2024 06:11 AM

சேத்துார்: சேத்தூர் வாழவந்தான் கண்மாய் பிரதான மதகு அருகே ஏற்பட்டுள்ள ஓட்டை அடைக்கும் பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்ததுடன் மணல் அள்ளும் அக்கறையை அதிகாரிகள் கண்மாய் பராமரிப்பில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சேத்துார் தேவதானம் ரோட்டில் முத்துச்சாமிபுரம் கிராமத்திற்கு உட்பட்ட வாழவந்தான் கண்மாய் உள்ளது. சாஸ்தா கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து 450 ஏக்கர் பாசனத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயில் நேற்று முன்தினம் தண்ணீர் பெருகியதன் காரணமாக பிரதான மடையின் திறப்பு அருகே ஓட்டை ஏற்பட்டு கண்மாய் நீர் வெளியேற தொடங்கியது.
பொதுப்பணித்துறையினர் ஆயிரத்திற்கும் அதிகமான மணல் மூடைகளை கரை உடையாமல் இருக்க இரண்டு நாட்களாக அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழையின் காரணமாக நீரின் வேகம் அதிகரித்ததால் கண்மாயின் இரண்டு கலுங்கல்கள் வழியே நீரை முழுவதும் திறந்து விட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்: கண்மாய் பாசன பரப்பில் 60 நாளில் பயிர்கள் அறுவடைக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் கரைகளை முழுமையாக பராமரிக்காததால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரை முழுவதும் திறந்து விட்டுள்ளனர். விவசாயிகள் போர்வையில் மண் கொள்ளையில் ஈடுபட்ட அக்கறையை கண்மாய் பராமரிப்பில் காட்டவில்லை.
ஏற்கனவே கரைகள் ஆங்காங்கே பலமிழந்து உள்ளது. விளை பொருட்களை வாகனங்களின் மூலம் கொண்டுவரவும் முடிவதில்லை. இதனால் அறுவடை வரைக்கான தண்ணீர் தேவைக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.