ஒரு வாரமாக தொடருது ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை
ஒரு வாரமாக தொடருது ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை
ADDED : ஆக 21, 2026 12:03 AM
காரியாபட்டி: மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு வாரமாக (பாயிண்ட் ஆப் சேல்) பி.ஓ.எஸ்., மின்னணு கருவி சர்வர் பிரச்னையால் செயல்படாததால் ஊழியர்களும், நுகர்வோர்களும் மன கடும் உளைச்சலுக்குள்ளாகி வருகின்றனர்.
மாநிலம் முழுதும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு, கார்டு விபரங்களைச் சரிபார்க்க பி.ஓ.எஸ்., கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு வாரமாக இணையதள சேவையில் ஏற்படும் வேகம் குறைவு, சர்வர் பிரச்னையால் விரல்ரேகை சரிபார்ப்பில் ஏற்படும் தாமதம் காரணமாக, ஒருவருக்குப் பொருட்கள் வழங்கி ரசீது போட நீண்ட நேரமாகிறது.
காலை முதல் ரேஷன் கடைகள் முன் நுகர்வோர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பொருட்கள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். ஊழியர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாநிலம் தழுவிய இந்தத் தொழில் நுட்ப பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
