/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அய்யனார் கோயில் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்
/
அய்யனார் கோயில் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்
ADDED : மார் 30, 2025 03:21 AM
சாத்துார், : சாத்துார் நள்ளிசிங்கமடை அய்யனார் கோயில் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நள்ளி சிங்கமடை அய்யனார் கோயில் கண்மாய்க்கு துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புறநகர் பகுதியில் இருந்தும் வேலாயுதபுரம் மற்றும் தோட்டிலோவன்பட்டி, நைனாபுரம் பகுதியில் இருந்து வரும் சிற்றாறு வழியாகவும் மழை நீர் வந்து சேர்கிறது.
கோவில்பட்டி புறநகர் பகுதியில் இருந்தும் வேலாயுதபுரம் நகரில் இருந்தும் வரும் நீர்வரத்து ஓடையில் அதிகளவு குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதன் காரணமாக கண்மாய் தண்ணீர் மாசடைந்த நிலையில் உள்ளது. கண்மாய் நீர் பாசனம் மூலம் நெல் வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் போது பயிர்கள் வளராமல் கருகி விடுகின்றன.
இதன் காரணமாக இந்த கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் குமராபுரம், நள்ளி,கஞ்சம்பட்டி பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாய தொழிலாளர்கள் கூலி வேலைக்காக மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கண்மாய் தண்ணீர் மாசு அடைவதை தடுக்க நீர் வரத்து ஓடையில் கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்துவதோடு கண் மாயை துார்வாரி ஆழப்படுத்திடவும் வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.