/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புலிகள் காப்பக மலையடிவாரத்தில் மலைக்க வைக்கும் மண் திருட்டு
/
புலிகள் காப்பக மலையடிவாரத்தில் மலைக்க வைக்கும் மண் திருட்டு
புலிகள் காப்பக மலையடிவாரத்தில் மலைக்க வைக்கும் மண் திருட்டு
புலிகள் காப்பக மலையடிவாரத்தில் மலைக்க வைக்கும் மண் திருட்டு
ADDED : ஜூன் 20, 2025 12:10 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையடிவார சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பகுதிகளில் நடந்த மண் திருட்டு குறித்து நில அளவைத் துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தனிநபர் பட்டா நிலங்களில் இருந்து செங்கல் சூளைகளுக்கு அளவிற்கு அதிகமாக மண் எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பகுதி பாதிக்கப்படுவதாகவும், இதனால் வனவிலங்குகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலிகள் காப்பகத்தின் சார்பில் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சுகாதா ரஹிமா தலைமையில் வருவாய்த்துறை,வனத்துறை, நில அளவைத் துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன் தினம் திருவண்ணாமலை பந்த பாறை பகுதிகளில் சேட்டிலைட் மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்றும் திருவண்ணாமலை பின்புறம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட மண்களின் அளவு குறித்து அளவீடு செய்யும் பணியில் காலை முதல் மாலை வரை நில அளவை துறையினர் ஈடுபட்டனர்.
இதுவரை மலை அடிவாரப் பகுதியில் மண்களை எடுத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள செங்கல் சூளைகளுக்கு மட்டுமே சப்ளை செய்து வந்த நிலையில், தற்போது மண் அள்ளும் இடத்திலேயே சூளை அமைத்து செங்கல் தயாரிக்கும் பணி பல இடங்களில் நடப்பதையும், அதற்காக ஒவ்வொரு செங்கல் சூளையிலும் மலைக்க வைக்கும் அளவில் மண் குவிக்கப்பட்டுள்ளது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.