/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடையில்லா சான்று இல்லாமல் இயங்கும் கடைகள்
/
தடையில்லா சான்று இல்லாமல் இயங்கும் கடைகள்
ADDED : ஆக 09, 2025 11:31 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல கடைகள், வணிக வளாகங்கள் தீயணைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்பு, தொழிலாளர் நலவாரிய துறையின் தடையில்லா சான்று இல்லாமலே இயங்குகின்றன. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அரசுத்துறை நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் டில்லியில் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியாகினர். இந்த கட்டடத்திற்கு தீயணைப்பு மீட்பு பணி குழுவிடம் இருந்து தடையில்லா சான்று வழங்கப்படவில்லை என விபத்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று விருதுநகர் மாவட்டத்தில் பல முக்கிய வணிக கடைகள் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று பெறாமலே இயங்கி வருகிறது.
குறிப்பாக மாவட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள மெயின் பஜார்களில் உள்ள கடைகள் குறுகிய சந்துகளுக்குள் அமைக்கப்பட்டு நெருக்கடியான சூழ்நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள சில கடைகள், ஜவுளி கடைகள், தியேட்டர்கள், மருத்துவ கிளினிக்குகள், ஓட்டல்கள் ஆகியவை தீயணைப்பு தடையில்லா சான்று இன்றி இயங்கி வருகிறது.
இது மட்டுமில்லாது நகராட்சியின் நகரமைப்பு அலுவலரின் சான்று, மாசுக்கட்டுப்பாட்டு சான்று, உணவு பாதுகாப்பு ஆய்வு, தொழிலாளர் நலவாரிய சான்று உள்ளிட்ட சான்றுகள் இன்றியும் இயங்கி வருகிறது. அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொள்வதே இல்லை.
ஒவ்வொரு துறையினருக்கும் இடை தரகர்கள் மூலம் கவனிக்கப்படுவதால் யாருமே இதை கண்டு கொள்வதில்லை. ஆனால் திடீரென தீவிபத்து ஏற்பட்டால் அரை மணி நேரத்திற்குள் கட்டடத்திற்குள் சிக்கியவர்களை தீயணைப்பு துறை மீட்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்பு, தொழிலாளர் நலவாரிய துறைகளை முறையாக செயல்பட்டு அனைத்து வணிக கட்டடங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

