/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பசுமை மன்றத்திற்கு நீர் நிலைகள் பாதுகாவலர் விருது
/
சிவகாசி பசுமை மன்றத்திற்கு நீர் நிலைகள் பாதுகாவலர் விருது
சிவகாசி பசுமை மன்றத்திற்கு நீர் நிலைகள் பாதுகாவலர் விருது
சிவகாசி பசுமை மன்றத்திற்கு நீர் நிலைகள் பாதுகாவலர் விருது
ADDED : ஜூன் 06, 2025 02:26 AM
சிவகாசி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நீர்நிலைகள் பாதுகாவலர் விருது, விருதுநகர் மாவட்டத்திற்கு சிவகாசி பசுமை மன்றம் அமைப்பிற்கு கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த விருதினை சென்னை வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சார்பில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ வழங்கினார்.
இந்த விருது கேடயமும், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் உடையது. சிவகாசி பசுமை மன்றம் சார்பில் நிறுவனர் ரவி அருணாச்சலம், இணைச்செயலாளர் வெங்கடேஷ்வரன் பெற்றனர்.
இது குறித்து சிவகாசி பசுமை மன்றம் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் காமராஜ் கூறுகையில், ''பசுமையை நோக்கிய எங்களது இந்த 6 ஆண்டு பயணத்தில் இது ஒரு மைல்கல். எங்களை இன்னும் உயரச் செல்ல இது தூண்டுகோலாக அமையும்,'' என்றனர்.
பசுமை மன்றம் சார்பில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள பெரியகுளம், சின்னக்குளம், சிவகாசி செங்குளம், திருத்தங்கல் செங்குளம், பொத்தமரத்து ஊரணி, கடம்பங்குளம் மற்றும் விளாம்பட்டி ரோடு ஊரணி என 257 ஏக்கர் பரப்பளவிலான நீர்நிலைகள், 17 கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன.
இவை 0.1 டி.எம்.சி தண்ணீர் கொள்ளளவு என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கண்மாய் கரைகள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், கல்லூரிகள், தனியார் நிலங்கள் என சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.