/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலத்தடிநீரை உறிஞ்சுவோர் மீது குற்ற வழக்கு பதிய தீர்ப்பு அதிகாரிகள் குழுக்கள் ஏற்படுத்துமா மாவட்ட நிர்வாகம் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 04, 2025 02:45 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் உறிஞ்சுவோர் மீது குற்ற வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில் தீர்ப்பின் அடிப்படையில் ஆய்வுகள் செய்ய அதிகாரிகள் குழுக்கள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் பல பகுதிகளில் மினரல் குடிநீர் நிறுவனங்கள் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து விற்பதாக விருதுநகர் அழகாபுரியை சேர்ந்த வீரப்பெருமாள் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், சில நிறுவனங்கள் அனுமதி பெற்றதைவிட கூடுதலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் எடுத்து விற்கின்றனர் என்றும்,இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சிறிய நீரோடைகள், விவசாய கிணறுகள் மற்றும் குளம் போன்றவற்றிலும் நிலத்தடி நீர் அடி ஆழத்துக்கு சென்று விட்டது என்றும், இதனால் குடிநீருக்கு பொதுமக்கள் அலையும் நிலை உள்ளது. எனவே சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்தும் தனியார் மினரல் குடிநீர் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று முன் தினம் மதுரை உயர்நீதிமன்றக்கிளை வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது கண்டறிந்தால் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்றக்கிளையின் தீர்ப்பை தாமதிக்காமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ப முதற்கட்டமாக வருவாய்த்துறை, உள்ளாட்சி அதிகாரிகள், அலுவலர்கள் அடங்கியகுழுக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு திருநெல்வேலியில் இருந்து தான் தாமிரபணி குடிநீர் வினியோகமாகிறது.உள்ளூர் நீராதாரங்களான கவுசிகா நதி, குண்டாறு, அர்ஜூனா நதி போன்றவை வறண்டு விட்டன. விருதுநகர் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றக்கிளையின் தீர்ப்பை செயல்படுத்தி குழுக்கள்ஏற்படுத்தி, ஆய்வு நடத்தி குற்ற வழக்கு பதிந்தால் மட்டுமே குடிநீர், நிலத்தடி நீர் இரண்டும் பாதுகாக்கப்படும்.