/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூடும் நிலையில் ஸ்பின்னிங் மில்கள்
/
மூடும் நிலையில் ஸ்பின்னிங் மில்கள்
ADDED : செப் 29, 2024 05:19 AM

ராஜபாளையம் ; மூடும் நிலையில் உள்ள ஸ்பின்னிங் மில்களை காப்பாற்ற மானியம், மின் கட்டணத்தில் சலுகைகளை அளித்தால் மட்டுமே தொழிலை காப்பாற்ற முடியுமென உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிக குடும்பங்களின் வேலைவாய்ப்புக்கு பஞ்சு சார்ந்த ஜவுளித் துறை ஆதாரமாக உள்ளது. தமிழகத்தில் கோவைக்கு அடுத்து அதிக அளவு பஞ்சு சார்ந்த ஸ்பின்னிங், ஓ.இ., டெக்ஸ்டைல், வில்லோ ஆலைகள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் , விருதுநகர், அருப்புக்கோட்டை, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிகம் உள்ளன.
இங்கு ஜின்னிங், கழிவு பஞ்சிலிருந்து உற்பத்தி செய்யும் வில்லோ, ஸ்பின்னிங் மில்கள் என 300க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மின்சார கட்டணம் 430 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தவிர பீக் ஹவர் கட்டணம், சோலார் உற்பத்திக்கும் கட்டாய வசூல், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என தமிழக அரசால் அமலுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது.
இதை நீக்க கோரி மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல கட்ட கவன ஈர்ப்பு மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கோரிக்கைகள் பரிசீலிப்பதாக கூறி எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
ஏற்கனவே பஞ்சிற்கும், நுாலிற்கும் விலை வித்தியாசங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க முடியாமல் 30 சதவீதம் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களை தக்க வைக்க விடுமுறை விட்டு பாதி நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
உத்திர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஸ்பின்னிங் தொழிலுக்கு மானியம், மின் கட்டண சலுகை கிடைத்து வரும் நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு நிலை நீடித்தால் பஞ்சு சார்ந்த தொழில்கள் நலிவடைந்து மூடப்படும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆனந்தகுமார், உதவி தலைவர், ராஜபாளையம் நுாற்பாலை சங்கம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் ஸ்பின்னிங் தொழில் மூலம் ரூ.200 கோடி வரை உற்பத்தி நடந்து வந்தது.
ஆந்திரா, குஜராத் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் பஞ்சு உற்பத்தி நிலையில் கிலோவிற்கு 8 ரூபாய் அடக்க விலை அதிகரித்துவிடுகிறது.
இத்துடன் அதிகரித்துள்ள மின்கட்டணமும் சேர்ந்து உள்நாட்டிலேயே போட்டியை சமாளிக்க முடியவில்லை. இதனால் வங்கிகளுக்கான முறையாக கடன் தவனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமானோரின் வாழ்வாதாரமான ஸ்பின்னிங் தொழிலை பாதுகாக்க மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். என்றார்.