/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்து வரும் ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம்
/
சேதமடைந்து வரும் ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம்
சேதமடைந்து வரும் ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம்
சேதமடைந்து வரும் ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம்
ADDED : நவ 02, 2025 04:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சேதம் அடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சுற்றுச்சுவர் ,படித்துறை, குளத்தில் மிதக்கும் கழிவுகள், நான்கு பக்கமும் அசுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு என பல்வேறு அவலங்களின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் காணப்படுவது பக்தர்களை வேதனை படுத்தி வருகிறது.
நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இக்குளத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் எண்ணெய் காப்பு உற்ஸவமும், குளம் முழுவதும் நிரம்பி இருந்தால் மாசி மகத்தன்று தெப்பத் திருவிழாவும் நடப்பது வழக்கம்.
ஒருமுறை தண்ணீர் நிரம்பினாலே பல ஆண்டுகளுக்கு குளத்தை சுற்றியுள்ள நகரின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இத்தகைய சிறப்புமிக்க இந்த குளத்தின் வடக்கு பகுதி தடுப்பு சுவர் சிதைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. குளத்தில் நான்கு பக்க கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர் இந்த குளத்தில் சேகரமாகும் வகையில் வழித்தட பாதைகள் இருந்த போதிலும் தற்போது அதில் கழிவுகள், மாமிச இறைச்சிகள் கொட்டப்படுவதால் அசுத்தமான நிலையில் குளத்தில் தண்ணீர் தேங்குகிறது. கழிவுகள் மிதக்கிறது. குளத்தினை சுத்தப்படுத்தி, தடுப்பு சுவர்கள் கட்டி, ஆக்கிரமிப்புகள் அகற்றி புனிதமான குளமாக திருமுக்குளத்தை உருவாக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் நிதி ஒதுக்கீடு செய்து குளத்தை சீரமைப்பதில் அறநிலைத்துறை மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் குளத்தை சீரமைத்து சுத்தபடுத்தி, புனிதமான குளமாக உருவாக்க கோயில் நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மன வேதனை அளிக்கிறது - வேல் முருகன், ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் திருமுக்குளம் சுற்றுச்சுவர் சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் நாளுக்கு நாள் கரைகள் பலவீனமடைந்து வருகிறது. இதனை சீரமைப்பதில் கால தாமதம் ஏற்படுவது மக்களுக்கு மிகுந்த மன வேதனை தருகிறது. எனவே, அறநிலையத்துறை தனிக் கவனம் செலுத்தி குளத்தினை விரைந்து சீரமைக்க வேண்டும்.
புனிதம் கெடுகிறது கிருஷ்ண குமார், ஸ்ரீவில்லி புத்துார்: ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சக்கரைகுளம், திருப்பாற்கடல் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கழிவு நீர் குளமாக உள்ளது. ஆண்டாள் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கும் திருமுக்குளம் சேதமடைந்து பல ஆண்டுகளான நிலையில் தற்போது கழிவுகள் சேர்ந்து குளத்தின் புனிதம் கெடுகிறது. இனிமேலும் அறநிலையத்துறை காலதாமதம் செய்யாது திருமுக்குளத்தை சீரமைக்க வேண்டும்.
சீரமைக்க வேண்டும் சுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்துார்: ேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் நீர்வழி பாதைகள் உள்ளது. தற்போது இதில் குப்பைகள், மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் குளத்திற்கு வரும் நீர் அசுத்தமான கழிவு நீராக வருகிறது. வடக்கு பக்க தடுப்பு சுவரும், படித்துறைகளும் மிகவும் மோசமாக உள்ளது. இதனை காலதாமதம் இன்றி சீரமைத்து, குளத்தின் புனிதத்தை காக்க வேண்டும்.

