/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு
/
தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு
ADDED : மார் 30, 2025 03:29 AM
காரியாபட்டி : வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பது, ரூ. பல லட்சங்கள் செலவு செய்து கட்டப்பட்ட சுகாதார வளாகம், குளியல் தொட்டி பயன்பாடு இன்றி கிடப்பது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட முடியனுர் பகுதியில் ரூ. பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. திறக்கப்பட்டு ஒரு சில நாட்கள் பயன்பாட்டில் இருந்தது. அதற்கு பின் போதிய பராமரிப்பு, அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ரூ. பல லட்சம் அரசு நிதி வீணாகி வருகிறது. மக்கள் மீண்டும் திறந்தவெளியை நாடி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
அதேபோல் ஈ.வே.ரா., தெருவில் வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி வீதியில் தேங்குகிறது. துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. வாகனங்கள் சென்று வருவதால் கழிவு நீர் வீடுகளில் சிதறி அசுத்தமாகிறது. கோவில்பட்டி செல்லும் வழியில் கட்டப்பட்ட குளியல் தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ரூ. பல லட்சம் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
முத்து, தனியார் ஊழியர்: திறந்தவெளியை பயன்படுத்த கூடாது என்பதற்காக அரசு ரூ. பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்படுகிறது. அதனை முறையாக பராமரிக்காததால் மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அரசு நிதி வீணாவதுடன் மீண்டும் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
பயன்பாட்டிற்கு வருமா
தியாகராஜன், தனியார் ஊழியர்: மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. பல லட்சம் செலவு செய்து கோவில்பட்டி செல்லும் வழியில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. என்ன காரணமோ தெரியவில்லை, பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்திருப்பதால் கால்நடைகள், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கழிவுநீரால் கொசுக்கடி
ஆறுமுகம், தனியார் ஊழியர்: ஈ.வே. ரா., தெருவில் வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி வீதிகளில் தேங்குகிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. உடலில் தடிப்பு ஏற்படுகிறது. சிறுவர்கள் விளையாடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகனங்கள் சென்று வரும்போது கழிவு நீர் சிதறி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.