/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடங்கிய திடக்கழிவு மேலாண்மை திட்டம்
/
முடங்கிய திடக்கழிவு மேலாண்மை திட்டம்
ADDED : மார் 29, 2025 06:33 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றித்தில் முடங்கிய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் குப்பைகள் குவிவதோடு நோக்கமே வீணாகி வருகிறது. இதை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ள 36 கிராமங்களில் சேகரமாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய 2020 ம் ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பில் சத்திரப்பட்டி அருகே மேலராஜகுலராமன், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சிகளில் தனித்தனியாக 25 அடி அகலம் 60 அடி நீளத்தில் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டது.
இதனை ஒட்டி உரக்குழிகளும் உர மையத்தில்சல்லடை கன்வேயர் பெல்ட் இவற்றைப் பிரித்து நுண்ணுயிர் கலந்து உரமாகமாற்ற 18 தொட்டிகள் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் அருகாமை கிராமங்களில் கழிவுகளை சேகரிக்க டிராக்டர் வாகனங்கள் கழிவுகளைப் பிரிக்க தினமும் 5 நபர்கள் என பணிகள் தொடங்கினர்.
நாளடைவில் அருகாமை கிராமங்களில் இருந்து கொண்டு வந்து சேர்க்க ஆட்கள், வாகன கட்டமைப்புகள் பற்றாக்குறை குப்பைகளை தரம் பிரிக்காமல் கொண்டு வந்து சேர்ப்பதால் ஏற்படும் சிக்கல், போதிய நிதி வழங்காதது போன்றவற்றால் சுணக்கம் ஏற்பட்டது.
இதனால் அனைத்து கிராமங்களின் கழிவுகளும் சேகரிப்பது என்ற நிலை மாறி நுண் உர கிடங்கு அமைந்த கிராமத்தில்மட்டும் பணிகள் நடந்தது.
தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் தெற்கு வெங்காநல்லுார் உர கிடங்கு காட்சி பொருளாக மாறிவிட்டது. தற்போது ஊராட்சி தலைவர் காலம் முடிந்ததும் ஜன. முதல் அயன் நத்தம்பட்டி உரக்கிடங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிராம பகுதிகளில் சேரும் குப்பை கழிவுகள் உரமாக மாற்ற முடியாமல் ஆங்காங்கே கண்மாய்களிலும் ஓடைகளிலும் கொட்டப்பட்டும் எரித்தும் மாசு ஏற்படுத்தி வருகிறது.
நீர்நிலைகளில் கழிவுகள்
ராமசுந்தரம், கிருஷ்ணாபுரம்: குவியும் குப்பை கழிவுகளுக்கு தகுந்த ஏற்பாடு செய்யாமல் அருகாமை கண்மாய்கள் நீர்வழிப் போக்கு ஒடைகள், வெற்றிடங்களில் போட்டு செல்கின்றனர். கழிவுகள் குவிந்ததும் எரித்து பணிகளை முடிப்பதால் மீதமுள்ள பிளாஸ்டிக், திட கழிவுகள் உள்ளிட்டவை மண், நீர், காற்று என அனைத்தையும் மாசு படுத்தி வருகிறது. இது பிரச்சனைகளால் நீர் நிலைகள் எங்கும் கழிவுகள் நிறைந்துள்ளது.
நோக்கம் வீண்
பால்க்கனி, சத்திரப்பட்டி: கழிவு மேலாண்மை என நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்ட இதன் செயல்பாடு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பெயரளவிற்கு செயல்படுகிறது. கட்டமைப்பை காட்சிப் பொருளாக மாற்றி உள்ளதால் அரசின் நோக்கம் வீணாவதுடன் வருங்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தீர்வு
கட்டமைப்புக்கு தேவையான ஆட்கள், நிதி, சேகரிக்க வாகனங்கள்,சேகரமாகும் கழிவுகள் பிரித்து வழங்கப்படுகிறதா என்பதை சரி பார்ப்பது, உரமாக மாற்றி தேவைப்படும் விவசாயிகளுக்கு விநியோகிப்பது போன்ற அடிப்படை பணிகளை உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.