/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்னும் ஓயல... பிளக்ஸ் கலாசாரம்... சுப நிகழ்ச்சிகளில் தலைதுாக்குது
/
இன்னும் ஓயல... பிளக்ஸ் கலாசாரம்... சுப நிகழ்ச்சிகளில் தலைதுாக்குது
இன்னும் ஓயல... பிளக்ஸ் கலாசாரம்... சுப நிகழ்ச்சிகளில் தலைதுாக்குது
இன்னும் ஓயல... பிளக்ஸ் கலாசாரம்... சுப நிகழ்ச்சிகளில் தலைதுாக்குது
ADDED : மே 29, 2025 01:46 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பிளக்ஸ் பேனர் கலாசாரம் இன்னும் ஓயவில்லை. மெல்ல மெல்ல அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்த நிலையில், தற்போது சுப நிகழ்ச்சிகளிலும் தலைதுாக்குகிறது.
இவை ரோட்டோரங்களில் ஆபத்தான இடங்களில் வைக்கப்பட்டு சாய்ந்துள்ளன. அதே போல் சிலர் மின்கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர். போலீசார் இதை தடுக்க வேண்டும்.
2019 செப். ல் அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரின் திருமண வீட்டு பிளக்ஸ் பேனர் சரிந்து டூவீலரில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ பலியானார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே வேதனையடைய செய்தது. இதற்கு பின் உயர்நீதிமன்றம் கடும் உத்தரவுகள் பிறப்பித்தது.
மூன்று ஆண்டுகள் வரை கட்டுப்பாடுகள் கறாராக இருந்தன. இதனால் பேனர் பயன்பாடு குறைந்திருந்தது. ஆனால் 2022ல் நகராட்சி தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்ற பிறகு கட்சியினர் மத்தியில் மீண்டும் பிளக்ஸ் பேனர் கலாசாரம் தலைதுாக்க துவங்கியது.
அரசியல் கட்சிகளிடம் இருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த இந்த கலாசாரம், தற்போது சுப நிகழ்ச்சிகளிலும் அதிகரித்துள்ளது.அதுவும் கட்சிக்காரர்களின் இல்ல திருமணம் என்றால் ரோட்டின் ஓரம், பொது இடம் என எதுவும் பார்ப்பது கிடையாது. பிளக்ஸ் பேனரை நடைபாதையில் வைக்க கூடாது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு எடுக்க வேண்டும். அதன் உறுதித்தன்மையை போலீஸ், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உயர்நீதிமன்றம் அளித்திருந்தது.
அது எதுவுமே தற்போது பின்பற்றுவது கிடையாது. பிளக்ஸ் பேனர் வைக்க போலீசாரின் அனுமதி அவசியம். தற்போது இதை போலீசாரும் பின்பற்றுவதில்லை. மக்களும் கண்டுக் கொள்வதில்லை. இதனால் பேனர் வைக்கும் கலாசாரம் இஷ்டத்திற்கு அதிகரித்து வருகிறது.
நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நிறைய திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கட்சி திருமணம் ஒன்றிற்காக விருதுநகர் மருத்துவக்கல்லுாரி அருகே வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் காற்றில் சரிந்து காணப்பட்டது.
அதே போல் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் ஒன்று மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. போலீசார் இதை கண்டுக் கொள்ளாவிட்டால் இது போன்ற விதிமீறல்கள் வரும் நாட்களிலும் அதிகரிக்கும்.
மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும். தலைதுாக்கும் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை தடுத்து ரோட்டோர விபத்துக்களை தடுக்க வேண்டும். இனி வருவது காற்றுக்காலம் என்பதால் இது அவசியம்.