/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'ஸ்வயம்' தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
/
'ஸ்வயம்' தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
'ஸ்வயம்' தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
'ஸ்வயம்' தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
ADDED : ஜூன் 01, 2025 03:42 AM

காரியாபட்டி: பி.எட்., மாணவர்களுக்கான மத்திய அரசு சார்பாக நடந்த செயலில்கற்றல் 'ஸ்வயம்' தேர்வில் பங்கேற்க காரியாபட்டி மையத்திற்கு தாமதமாக வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக செயலில்கற்றல் 'ஸ்வயம்' தேர்வு நடத்தப்படுகிறது. இவை தனியார் ஏஜென்சிகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில்,காரியாபட்டி தனியார் பொறியியல் கல்லூரியில்மையம் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்தும் பி.எட் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். 3 வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற்று வருகிறது. நேற்று கடைசி நாள்.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் நேற்று காலை வந்தனர். நீண்ட நேரம் பயணம், இடம் தெரியாதது உள்ளிட்ட காரணங்களால் 10 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தனர். இதனால் தேர்வு மையத்திற்குள் 15க்கு மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
பல மணி நேரம் காத்திருந்தும், அடுத்து மதியம் நடந்த தேர்வர்களுடன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கெஞ்சினர். இதற்கு தனியார் ஏஜென்சி செவி சாய்க்கவில்லை. அனுமதி கிடைக்காததையடுத்து விரக்தியில் வீடு திரும்பினார்.
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:
ஆண்டுக்கு ஒரு முறை தனியார் ஏஜென்சி மூலம் மத்திய அரசு சார்பாக பி.எட்.,மாணவர்களுக்கு ஸ்வயாம் தேர்வு நடத்தப்படுகிறது. பி.எட்., பாடத்திட்டங்கள் அனைத்திலும் தேர்வானாலும் மத்திய அரசு நடத்துகிற இந்த தேர்வில் கட்டாயம் தேர்வு பெற்றால் மட்டுமே தகுதி பெற்றவர்களாக கருதப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததால்10 நிமிடங்கள் தாமதம் ஆகின. இருந்தாலும் மன்னிப்பு கேட்டு அனுமதி வழங்க வேண்டி கெஞ்சியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
தேர்வு மையம் அருகிலே இருந்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காது. இனி அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. காலம் விரயம் ஆகும் என்பதால் வேதனையாக உள்ளது என்றனர்.
தேர்வு நடத்துபவர் கூறியதாவது:
ஹால் டிக்கெட்டில் தேர்வு நேரம், அனுமதிக்கப்படும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்திற்கு வரவேண்டியது அவர்களுடைய பொறுப்பு. 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியவில்லை. நிர்வாகிகளிடம் கேட்டபோது அனுமதிக்க வேண்டாம் என்றனர். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, என்றார்.