தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சப் கலெக்டர் அலுவலகத்தில் கண்துடைப்பாக நடக்கும் ஆய்வுக் கூட்டங்களால் பயனில்லை

சப் கலெக்டர் அலுவலகத்தில் கண்துடைப்பாக நடக்கும் ஆய்வுக் கூட்டங்களால் பயனில்லை

சப் கலெக்டர் அலுவலகத்தில் கண்துடைப்பாக நடக்கும் ஆய்வுக் கூட்டங்களால் பயனில்லை


ADDED : ஜூலை 04, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பெருகும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விவசாயிகள் குறைகளை தீர்க்கவும், சீரான குடிநீர் சப்ளை செய்யவும் கலெக்டர், சப் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களால் எவ்வித பயனும் இல்லாத நிலையே காணப்படுகிறது. கண்துடைப்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு களப்பணியில் போதுமான ஊழியர்களை நியமித்து தொடரும் குறைகளை நிரந்தரமாக தீர்க்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இதேபோல் கலெக்டர் அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகம், புலிகள் காப்பக இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தேசிய, மாநில நெடுஞ்சாலை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், போலீசார் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் மாதம் தோறும் நடத்தப்படுகிறது.

இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் சீரான குடிநீர் சப்ளை நடப்பதை கண்காணிக்கும் பொருட்டு கலெக்டர் அலுவலகத்திலும், மண்டல இயக்குனர் அலுவலகத்திலும் மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகள் சில புள்ளி விவரங்களை அளிப்பதும், அதற்கு உயர் அதிகாரிகள் சில அறிவுறுத்தல்கள் சொல்வதும் ஒரு கண் துடைப்பான பணியாகவே நடக்கிறது. ஆய்வு கூட்டம் முடிந்தவுடன் கலெக்டர் அறிவுறுத்தல் என செய்திகள் மட்டுமே வருகிறது.

ஆனால் நடைமுறையில், நிஜத்தில் மக்களின் குறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் பிரச்னைகள் நீடித்துக் கொண்டே இருக்கிறது. விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

உதாரணமாக ஒவ்வொரு நகரிலும் போக்குவரத்து நெருக்கடி, அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள், திருவிழாக்களில் அதிகரித்து வரும் குழாய் ரேடிேயா பயன்பாடுகள், தனிநபர் முதல் அரசு விழாக்கள் வரை சரவெடி பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனை நடைமுறையில் அதிகாரிகள் பார்த்தும் கண்டுகொள்ளாமல் தான் உள்ளனர். இதனால் விதி மீறல்கள் ஈடுபடுவோர் அச்சமின்றி செயல்பட்டு வருகின்றனர்.

இதுபோல் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உயர் அதிகாரிகள் ஆய்வு நடக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் கலெக்டர் காலையில் வந்து ஏதாவது ஒரு தெருவில் குடிநீர் தரத்தை பரிசோதிப்பதும், சில அறிவுரைகள் வழங்குவதும் தொடர்கதையாக நடக்கிறது.

ஆனால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒவ்வொரு தெருவிலும் மக்கள் பயன்பாட்டுக்குரிய தண்ணீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. அதனை சீர் செய்வதற்கு வார கணக்கில் ஆகிறது. இதனால் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இடையில் உயரதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் தற்போது 15 நாட்களைக் கடந்து செல்கிறது. இதனால் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகள், காட்டு பன்றிகள், கரடிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் விவசாயிகள் வழக்கமான அதே குறைகளை, கேள்வியை கேட்பதும், அதிகாரிகள் அதே பதிலை திரும்ப சொல்வதும் வாடிக்கையாகவே நடக்கிறது. ஆனால், நிரந்தர தீர்வு தான் காணப்படவில்லை.

இவ்வாறு மக்களுடன் நேரடி தொடர்புடைய பிரச்னைகளில் களத்தில் நிலவும் குறைகளை சரி செய்வதை விட்டுவிட்டு, அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி, அறிவுரை சொல்வதால் பயனில்லாத நிலையே நீடிக்கிறது.

எனவே, தற்போது அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பழுதடைந்த குடிநீர் குழாய்களை காலதாமதமின்றி உடனடியாக சீரமைக்கவும், கூடுதல் குடிநீர் குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதே மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும்.

இதேபோல் ஒவ்வொரு நகரிலும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குழாய் ரேடியோ பயன்பாடுகளை தடுக்கவும், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தவும், பொது இடங்களில் சரவெடிகளை கொளுத்தி போடுவதை தடுக்கவும் போலீசார் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நடமாடும் வன விலங்குகளை, அடர்வனத்தின் உட்பகுதியில் விரட்ட வனத்துறை களப்பணியாற்ற வேண்டும்.

இதற்கு களத்தில் இறங்கி குறைகளை சரி செய்ய போதுமான ஊழியர்களை நியமித்து மக்கள் படும் கஷ்டங்களை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us