தெருக்களில் சிதையும் பேவர் பிளாக் ரோடுகள்:சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வாகன ஓட்டிகள்
தெருக்களில் சிதையும் பேவர் பிளாக் ரோடுகள்:சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வாகன ஓட்டிகள்
UPDATED : மே 09, 2026 10:19 PM
ADDED : மே 09, 2026 10:11 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் உள்ள பேவர் ப்ளாக் ரோடுகளின் கற்கள் சிதைந்து வருவதாலும், தார் ரோடுகளில் பள்ளம் விழுந்து குண்டும், குழியுமாக மாறி வருவதாலும் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் பேவர்ப்ளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகள் அமைத்து 10 ஆண்டுகளான நிலையில் பல்வேறு தெருக்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கவும், கனரக வாகனங்களால் சிதைந்தும் காணப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு வார்டுகளின் மெயின் ரோட்டை இணைக்கும் குறுகிய சந்துகளில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடுகளிலும் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
இதனை நகராட்சி நிர்வாகம் சரி செய்து வந்தாலும் ,பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகளில் தடுப்பு சுவர் சிதைந்து வருவதால் கற்கள் உறுதித் தன்மை இழந்து ஆடுவதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை உருவாகி வருகிறது.
சந்திய கிணற்று தெரு, கூனங்குளம் தெரு உட்பட பல்வேறு தெருக்களில் பள்ளம் மேடாக ரோடு காணப்படுகிறது. இதே போல் வாழைக்குளம் தெருவில் இருந்து திருமுக்குளம் கிழக்கு ரோட்டிலும் தார்ரோடு சிதைந்து காணப்படுகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடுகளையும், கனரக வாகனங்கள் செல்லும் வழியில் சேதமடைந்த தார்ரோட்டினை சீரமைக்க வேண்டும் .
* டூவீலரில் செல்வதில் சிரமம்
நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தெருக்களில் போடப்பட்ட பேவர் ப்ளாக் ரோடுகள் பள்ளம், மேடுவாகவும் சீரற்று இருப்பதால் டூவீலரில் செல்வதில் சிரமப்பட வேண்டியதுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்
- நித்யானந்தம், சுயதொழில் முனைவோர்.
* சீரமைக்க வேண்டும்
கம்மாபட்டியில் இருந்து சந்திய கிணற்றுத் தெரு செல்லும் பகுதியிலும், திருமுக்குளம் கிழக்குக்கரை பகுதியிலும் உள்ள தார் ரோடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. டூவீலரில் வேகவமாக வருபவர்கள் தவறி விழுகின்றனர். இதுபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த தார் ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
- கருப்பசாமி, சுய தொழில் முனைவோர்.
* தடுப்பு சுவர்கள் அவசியம்
நகரின் ஒவ்வொரு தெருவிலும் அமைக்கப்பட்டுள்ள பேவர்ப்ளாக் ரோட்டின் இரு புறமும் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் சிதைந்து கற்கள் ஆடுவதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து தெருக்களிலும் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை கட்ட வேண்டும்.
-மாரிமுத்து, தனியார் ஊழியர்.
