/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
/
கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
ADDED : அக் 26, 2025 05:24 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் கண்மாயில் மராமத்து பணி செய்து ஒரு வாரத்தில் ஆகாய தாமரை பசுமை போர்த்தி ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராஜபாளையம் கடம்பன் குளம் கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கண்மாய் நகராட்சி குடியிருப்பை ஒட்டி உள்ளதால் இப்பகுதியில் குப்பை, கட்டடக் கழிவுகள் கொட்டி ஆக்கிரமிப்பது அதிகம். இந்நிலையில் கண்மாயை சீரமைக்க ரூ. 98 லட்சம் செலவில் சமீபத்தில் தான் குடிமராமத்து பணிகள் நடந்து முடிந்தது. பணிகள் முடிந்து ஒரு வாரத்திற்குள் மழை பெய்த நிலையில் கண்மாய் பெருகி மறுகால் பாய்ந்தது.
இந்நிலையில் பணிகள் முடிந்து கண்மாயை சீரமைத்து சில நாட்களே ஆகிய நிலையில் ஆகாயத்தாமரை மீண்டும் பல்கி பெருகி வளர்ந்துள்ளதுடன் தண்ணீர் பரப்பை மூடத் தொடங்கியுள்ளது. இதனால் பணி முடிந்து சில நாட்களிலேயே மீண்டும் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது குறித்து விவசாயிகள் வேதனையின் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி கணேசன்: ஏற்கனவே கண்மாயில் குப்பை,கழிவுகள் கொட்டப்பட்டும் நீர் நிலையை ஒட்டி குடியிருப்பு வாசிகள் கால்நடைகளுக்கான தொழுவம், வாகன நிறுத்த ஷெட் எழுப்பி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கண்மாயின் நீர்பரப்பு குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் குடிமராமத்திற்கு ரூ.98 லட்சம் ஒதுக்கி ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகளை முழுவதும் சேகரித்து தீ வைத்து அழித்ததுடன், மற்ற பணிகள் செய்தனர்.
பணிகள் முடிந்து ஒரு வாரத்திற்குள் மழையினால் கண்மாய் நிறைந்ததுள்ள நிலையில் தற்போது ஆகாயத்தாமரை செழித்து வளர்ந்து கண்மாயை மூடி வருகிறது. செலவழித்த வேகத்தில் மீண்டும் வளர்வதால் இவற்றை நிரந்தரமாக அழிப்பதற்கான நடைமுறையை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.

