/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டுகிறது தி.மு.க., அரசு
/
வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டுகிறது தி.மு.க., அரசு
வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டுகிறது தி.மு.க., அரசு
வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டுகிறது தி.மு.க., அரசு
ADDED : ஆக 07, 2025 11:22 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ''வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டுகிறது தி.மு.க., அரசு'' , என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஸ்ரீவில்லிபுத்துாரில் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் கூட்டத்தில் அவர் பேசியதாவது;
எங்கள் ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வந்தோம். பயிர் கடன்களை ரத்து செய்தோம். அ.தி.மு.க., வழங்கிய நல்ல பல திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்தில் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என சொல்லியிருந்தார்கள்.
ஆனால் 50 நாட்களாக குறைத்து விட்டார்கள். உடனடியாக சம்பளமும் வழங்கவில்லை. அதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடி சம்பள பணத்தை பெற்று கொடுத்தது அ.தி.மு.க., தான்.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது நீட் தேர்வை ரத்து செய்தார்களா, மக்களையும், மாணவர்கள் ஏமாற்றும் அரசாங்கம் தி.மு.க., அரசாங்கம். பொய் பேசி ஆட்சிக்கு வந்த தி.மு.க மக்களை வாட்டி வதைக்கிறது.
இன்றைக்கு நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கொண்டுவந்துள்ளார்கள். அவரே நலமாக இல்லை, நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நாங்கள் உங்களைப் பற்றி பேச முடியும். அ.தி.மு.க., ஆட்சியின்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குக்கள், 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து ஏழை மக்களை காப்பாற்றினோம். ஆனால் அம்மா மினி கிளினிக்குகளை தற்போது மூடி விட்டார்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரம் மினி கிளினிக்குகளை திறப்போம்.
தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருந்து மாத்திரைகள் இல்லை.
மாணவர்களுக்கு லேப்டாப் உட்பட பல கல்வி சலுகைகள் வழங்கிய நிலையில் அதன் நிறுத்தி விட்டார்கள். இப்போது 20 லட்சம் மாணவர்கள் லேப்டாப் வழங்குவதாக கூறுகிறார்கள். 7 மாதத்தில் எப்படி வழங்க முடியும்.
நாங்கள் கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு படி இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர்.
நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம். மக்களை ஏமாற்றவில்லை. நாங்கள் மக்களுக்காக ஆட்சி செய்தோம். அவர்கள் குடும்பத்திற்காக ஆட்சி செய்கிறார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊர், ஊராக போய் மக்களிடம் மனு வாங்கியது என்ன ஆச்சு. மக்கள் குறை தீர்ந்ததா. இது எல்லாமே மக்களை ஏமாற்று நாடகம். ஒவ்வொன்றுக்கும் வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டுகிறார்கள் என பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.சந்திர பிரபா, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, இளைஞர் இளம்பெண் பாசறை மேற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், நகர செயலாளர்கள் துரைமுருகேசன், பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, அழகாபுரியான், நவரத்தினம், பேரூராட்சி செயலாளர்கள் அங்குதுரை, பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.