/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால், சமுதாய கூடம் இல்லை
/
ரோடு, வாறுகால், சமுதாய கூடம் இல்லை
ADDED : ஜூலை 30, 2025 07:00 AM

காரியாபட்டி: மண் ரோடாக இருப்பதால் மழை நேரங்களில் 6 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியிருப்பது, வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்குவது, அடிப்படை வசதி இன்றி பழைய ஓடு வேய்ந்த கட்டடத்தில் சமுதாயக்கூடம் செயல்படுவது என சக்கரக்கோட்டை குடியிருப்போர் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி சக்கரைக்கோட்டை குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பூச்சம்மாள், மரகதம், சோலையம்மாள், முத்துராமன், கக்கர்வாசு, அய்யனார் கூறியதாவது; ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., தூரம் உள்ள பாப்பனம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். நடந்து சென்று வாங்கி வர பெரிதும் சிரமமாக இருக்கிறது. மழை நேரங்களில் நீர் தேங்கி, மண் ரோடு சேறும் சகதியாக மாறுவதால் நடந்து செல்ல முடியாது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது.
6 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். மண் ரோடை தார் ரோடாக போட வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியில் தேங்கி, கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, பழைய ஓடு வேய்ந்த சமுதாயக்கூடம் உள்ளது. போதுமான இட வசதி இல்லாததால் விசேஷங்கள் நடத்த முடியவில்லை, அதனை அப்புறப்படுத்தி புதிய சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்.
மின்சாரம் இருந்தால் மட்டுமே புழக்கத்திற்கான தண்ணீர் கிடைக்கும். அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது. அடிகுழாய் சேதமடைந்து பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், மின்சாரம் இல்லாத நேரத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது. களம் சேதுமடைந்து கிடக்கிறது. விளைந்த பயிர்களை ரோட்டில் போட்டு பிரித்து எடுக்க வேண்டி உள்ளது. அதிவேகத்தில் வரும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களால் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. களத்தை சீரமைக்க வேண்டும். தரைதள தொட்டி சேதமடைந்து ஓராண்டாக பயன்பாடு இன்றி கிடக்கிறது. குளியல் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் குடியிருக்க முடியவில்லை. வாய்க்கால் ஏற்படுத்தி கண்மாய்க்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் செல்லும் வரத்து ஓடையின் குறுக்கே ரோடு போடப்பட்டது. மழை நீர் கடந்து செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. எளிதில் கண்மாய்க்கு செல்லும் வகையில் ரோட்டின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும். குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது என்றனர்.