/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
/
மாவட்ட முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
ADDED : அக் 29, 2025 09:32 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை அடுத்துநேற்று திருக்கல்யாணம் நடந்தது.
விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து விஷேச தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி நகர்வலம் வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வத்திராயிருப்பு : காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று கோயில் மைய மண்டபத்தில் கும்பநீரால் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து உற்ஸவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் எழுந்திருந்தனர். சஷ்டி மண்டபத்தில் தேவியர் இருவருக்கும் முருகன் தாலி அணிவித்தார். மாலையில் வீதியுலா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் : மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு முருகன் திருக்கல்யாணம் நடந்தது. திருமண கோலத்தில் எழுந்தருளிய முருகன், வள்ளி, தெய்வானைக்கு கோயில் பட்டர்கள் திருமணத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
சுந்தரபாண்டியம்: சக்திவேல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழா நடந்தது. முருகன், வள்ளி , தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்: மாயூரநாதர் சுவாமி கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகன் சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருமணம் நடந்தது. திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
காரியாபட்டி: முக்கு ரோடு மாரியம்மன் கோயிலில் நேற்று உற்ஸவர் முருகனுக்கு சிறப்பு யாகசாலை கலசங்கள், திருமண சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப் பட்டது.
பாலமுருகன், வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் மொய் எழுதினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

