/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமங்கலம் --ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறு: மாவட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு
/
திருமங்கலம் --ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறு: மாவட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு
திருமங்கலம் --ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறு: மாவட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு
திருமங்கலம் --ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறு: மாவட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு
ADDED : டிச 29, 2024 04:02 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் வகையில் நடந்து வரும் திருமங்கலம்- - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் மதுரை மாவட்டத்தில் 75 சதவீதமும், விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதமும் நிறைவு பெற்றுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஹைதராபாத்தில் இருந்து மேம்பால இரும்பு துாண்கள் கொண்டு வரும் பணி துவங்கியுள்ளது.
மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (எண். 744) வழித்தடம் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது.
தற்போது அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் இந்த வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமங்கலத்தில் இருந்து கொல்லம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து அதில் முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோமீட்டர் துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஓராண்டிற்கும் மேலாக இரவு, பகலாக நடந்து வருகிறது.
இதில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தில் இருந்து அழகாபுரி எல்லை வரை பெரும்பாலான இடங்களில் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் இதுவரை 75 சதவீத பணிகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை 35.6 கி.மீ., துாரம் ரோடு போடப்பட்டுள்ளது.
இதில் நத்தம்பட்டி, கிருஷ்ணன்கோவில், பாட்டகுளம், பூவாணி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களில் தற்போது வாகனங்கள் பயணித்து வருகிறது.
மேம்பாலங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் ரயில்வே தண்டவாளம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக ஹைதராபாத்தில் ரயில்வேத்துறை கண்காணிப்பில் தயாரிக்கப்பட்டு அங்கேயே வாகனங்களை இயக்கி பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பாலத்தின் இரும்பு தூண்கள் நேற்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரும் பணி துவங்கியுள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து பொருட்களும் வந்து சேர்ந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் தண்டவாளத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கும், அதன் பின்பு ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் ரயில்வே கேட்டு பகுதியிலும் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் இருந்து அழகாபுரி வரை 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இரண்டு ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் நான்கு வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் தெரிவித்தார்.