/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலங்கரை விளக்கமாக திருக்குறள் வழிகாட்டும் நண்பனாக திருவள்ளுவர் மாணவர் மாநாட்டில் குன்றக்குடி அடிகள் பேச்சு
/
கலங்கரை விளக்கமாக திருக்குறள் வழிகாட்டும் நண்பனாக திருவள்ளுவர் மாணவர் மாநாட்டில் குன்றக்குடி அடிகள் பேச்சு
கலங்கரை விளக்கமாக திருக்குறள் வழிகாட்டும் நண்பனாக திருவள்ளுவர் மாணவர் மாநாட்டில் குன்றக்குடி அடிகள் பேச்சு
கலங்கரை விளக்கமாக திருக்குறள் வழிகாட்டும் நண்பனாக திருவள்ளுவர் மாணவர் மாநாட்டில் குன்றக்குடி அடிகள் பேச்சு
ADDED : பிப் 03, 2024 01:42 AM

விருதுநகர்:''கடல் வழிப்பாதைக்கு கலங்கரை விளக்கமாக திருக்குறள் வழிகாட்டும். அதை இயற்றிய திருவள்ளுவர் எப்போதும் நண்பனாக இருந்து வழிகாட்டுவார்,'' என, விருதுநகரில் நடந்த திருக்குறள் மாணவர் மாநாட்டில் உலகத்திருக்குறள் பேரவைத்தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் தமிழ் திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற 800 மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் மாணவர் மாநாடு 2024 கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு பாடநுால், கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் சங்கரசரவணன், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.
பிப்., 2, 3 ல் நடக்கும் இம்மாநாட்டின் துவக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக மாணவர்களால் திருக்குறளை விளக்கும் வகையில் வரையப்பட்ட குறள் ஓவியம் கண்காட்சி அரங்கை உலகத் திருக்குறள் பேரவைத்தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின் அவர் பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது திருக்குறள். தற்போது எவ்வளவு நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும் திருக்குறள் புதிய பொருளை தந்து கொண்டே இருக்கிறது. கல்வி ஒன்றுதான் மனிதனை மனிதனாக மாற்றும் வல்லமை உடையது.
அத்தகைய கல்வியை பெறுவதற்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என உணர்த்துகிறது. இதுதான் உண்மையான ஞானப்பார்வை. ஆயுதம் எடுத்து ஒருவரை தாக்கினால் தான் கொலை என்பது அல்ல. பட்டினி போட்டு சாகடிப்பதும் கொலை தான் என்று கூறியவர் திருவள்ளுவர்.
நம் வாழ்வில் காட்டு வழிப்பாதைக்கு விளக்காகவும், கடல் வழிப்பாதைக்கு கலங்கரை விளக்கமாகவும், மலைவழிப்பாதைக்கு குன்றின் மேல் இட்ட விளக்காகவும் திருக்குறள் வழிகாட்டும். திருவள்ளுவர் எப்போதும் உங்களுக்கு நண்பனாக இருந்து வழிகாட்டுவார் என்றார்.
அறம், பொருள், இன்பம் என மாணவர்களால் 150க்கும் மேற்பட்ட குறள் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை இசை நிகழ்ச்சி, தமிழோடு விளையாடு ஆகியவை நடந்தன. மாணவர்களுக்கு வினாடி- வினா, நாடகம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி நன்றி கூறினார்.

