/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்தாண்டு அரவை கரும்பு கொள்முதல் செய்வதில் ... பரிதவிப்பு: வெளி மாவட்டத்திற்கு அனுப்புவதால் அதிக செலவு
/
இந்தாண்டு அரவை கரும்பு கொள்முதல் செய்வதில் ... பரிதவிப்பு: வெளி மாவட்டத்திற்கு அனுப்புவதால் அதிக செலவு
இந்தாண்டு அரவை கரும்பு கொள்முதல் செய்வதில் ... பரிதவிப்பு: வெளி மாவட்டத்திற்கு அனுப்புவதால் அதிக செலவு
இந்தாண்டு அரவை கரும்பு கொள்முதல் செய்வதில் ... பரிதவிப்பு: வெளி மாவட்டத்திற்கு அனுப்புவதால் அதிக செலவு
ADDED : நவ 22, 2025 04:14 AM

ராஜபாளையம்:மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய கரும்பு விவசாயிகள் இந்த ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு விளைவித்த நிலையில் கொள்முதல் கேள்விக்குறியாகி உள்ளது. வெளி மாவட்ட ஆலைகளுக்கு அனுப்புவதால் அதிக செலவு ஏற்படுவதால் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், வத்திரயிருப்பு, தேவதானம் பகுதிகளில் நீர்வரத்து காரணமாக நெல் விவசாயத்தை அடுத்து கரும்பு சாகுபடி அதிகம். இத்துடன் சிவகிரி தாலுகா, தென்காசி வரை இரண்டு மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கான எக்டேர் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் சிவகிரி தனியார் சர்க்கரை ஆலையில் ஒப்பந்த மூலம் கரும்பை அனுப்பி வந்தனர். இந்நிலையில் 2018-19ல் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த இரண்டு மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கான தொகை ரூ.8 கோடி வரை நிலுவையை வழங்காமல் இருந்ததால் ஆலை திறக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆலை இயங்காமல் உள்ளதால் கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் விளைவித்த கரும்புகளை சிவகங்கை, தேனி மாவட்ட சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பினர். கண்மாய் ஒட்டிய ஈரம் அதிகம் படியும் பகுதிகளில் கரும்பு விவசாயத்தை தவிர்த்து மாற்று விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் இந்த ஆண்டும் கரும்பை பயிரிட்டு காத்திருக்கின்றனர்.
நவ. மாதம் அரவைக்கான கரும்புகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில் இந்த ஆண்டும் இதுவரை கரும்பு ஆலை நிர்வாகம் பதிவை துவங்கவில்லை.
ஒரு பக்கம் 300க்கும் அதிகமான இரண்டு மாவட்ட விவசாயிகள் நிலுவைத் தொகை கிடைக்காததால் விவசாய பணிகளுக்கான செலவுகளை வங்கி மூலம் பெற முடியாமல் தவிக்கின்றனர். இன்னொரு பக்கம் வெளி மாவட்டத்திற்கு அனுப்புவதால் வெட்டு கூலி, வாடகை பங்களிப்பு, எடை குறைவு போன்ற சிக்கலை எதிர்நோக்கும் நிலை உள்ளது.
இதனால் இந்தாண்டு கொள்முதல் கேள்விக்குறியாகி உள்ளது. நிலுவைத் தொகையை பெற்று தருவதுடன், கொள்முதலுக்கும் அரசு ஏதாவது நிரந்தர தீர்வு காண வேண்டும். தொலைதுார மாவட்டங்களுக்கு அனுப்புவதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முத்தரப்புக் கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும்.

